Monday, 28 April 2014

அரசு, தனியார் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற கோரி மனு

அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் உள்பட அனைத்துப் பள்ளிகளின் அடிப்படை வசதிகள் தொடர்பாக 2012-ஆம் ஆண்டு அரசாணையை நடைமுறைப்படுத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சென்னைப் பிரிவு செயலாளர் வி.கார்த்திகேயன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்: சென்னை மாநகராட்சியின் கீழ் 313 பள்ளிகள் செயல்படுகின்றன. அதில், 1.17 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர்.
பள்ளிக் கல்வி இயக்ககத்தின் வேண்டுகோளுக்கேற்ப, அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிகளிலும், கட்டடம், குடிநீர், கழிவறை, மின்சாரம், உட்காரும் பெஞ்ச் உள்பட அனைத்து அடிப்படை வசதிகள் தொடர்பாக கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 22-ஆம் தேதி தமிழக அரசு ஒரு ஆணை பிறப்பித்தது.
ஆனால், இந்த அரசாணை சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. சென்னையில் பல்வேறு பள்ளிகள் கட்டமைப்பு வசதிகள் இல்லாமலும், தரமில்லாமல் கட்டப்பட்ட கட்டமைப்புகளுடனும் உள்ளன. சடையான்குப்பம் மாநகராட்சிப் பள்ளிக் கட்டடம் அண்மையில் புதுப்பிக்கப்பட்டது. தரமில்லாமல் கட்டப்பட்ட காரணத்தால், கடந்த ஜனவரி 10-ஆம் தேதி கட்டட மேற்கூரை விழுந்தது.
இதில் இரண்டு குழுந்தைகள் காயமடைந்தனர். மேலும் எங்கள் அமைப்பு சார்பில் 57 மாநகராட்சி பள்ளிகளை பார்வையிட்ட போது எந்த ஒரு அடிப்படை வசதிகளும் அந்தப் பள்ளிகளில் நிறைவேற்றப்படவில்லை என்பது தெரிய வந்தது.
எனவே, 2012-ஆம் ஆண்டு அரசாணையை சிறப்பாகச் செயல்படுத்தவும், அதைக் கண்காணிக்க குழு அமைக்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ்குமார் அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment