Monday, 28 April 2014

கல்வி கட்டணம் என்ற பெயரில் தனியார் பள்ளிகளில் கடும் வசூல் வேட்டை

தமிழகத்தில் 10 ஆயிரத்து 934 தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் அதிகபடியான கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, 2009ல் ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் கல்வி கட்டண கமிட்டி ஏற்படுத்தப்பட்டு 2010 மே மாதம் கட்டணங்கள் உறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இக்கட்டணத்தில் திருப்தியடையாத கல்வி நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் கல்வி கட்டண கமிட்டியிலிருந்து வெளியேறினார். பின்னர் 2011 ஜூன் மாதம் ஓய்வு பெற்ற நீதிபதி ரவிராஜபாண்டியன், கமிட்டிக்கு தலைமையேற்று கட்டணங்களை நிர்ணயித்தார். இதற்கும் தனியார் பள்ளிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டிய கல்வி கட்டணத்தை 2012ல் ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையிலான குழுவினர் நிர்ணயம் செய்தனர். கோவிந்தராஜன் தலைமையிலான கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தை விட 15 சதவீதம் உயர்த்தியதுடன் 2014-15, 2015-16 ஆகிய ஆண்டுகளுக்கு தலா 10 சதவீதம் உயர்த்தியும் கட்டணத்தை வெளியிட்டனர்.
ஒவ்வொரு பள்ளியின் மாணவர் எண்ணிக்கை, உள்கட்டமைப்பு வசதி, ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஊதியம், நிர்வாக பராமரிப்பு செலவு என பலவற்றை ஆய்வு செய்து அதனடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு பள்ளிக்கும் ஒவ்வொரு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் நிர்ணயித்துள்ள கல்வி கட்டணத்தில் அதிகபட்சமாக 12ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கே ரூ.50 ஆயிரத்துக்கும் குறைவாகத்தான் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பெரும்பாலான தனியார் பள்ளிகள் எல்.கே.ஜிக்கே லட்சக்கணக்கில் நன்கொடை என்ற பெயரில் வசூலித்து வருகின்றனர். மேலும் நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வி கட்டணத்தை பெரும்பாலான தனியார் பள்ளிகள் வசூலிப்பதில்லை. இதுகுறித்து கேள்வி கேட்கும் பெற்றோரின் குழந்தைகளை பழி வாங்கும் நடவடிக்கைகளிலும் ஆசிரியர்கள் ஈடுபடுவதாக குற்றம் சாட்டுகின்றனர். இதை கண்டித்து ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலும் பெற்றோரும் மாணவர்களும் டி.பி.ஐ வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே 2014-15ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தனியார் பள்ளிகளில் தொடங்கி நடந்து வருகிறது. எனவே கல்வித்துறை அதிகாரிகள் கல்வி கட்டணம் முறையாக வசூலிக்கப்படுகிறதா என்று தற்போதிருந்தே கண்காணிக்க வேண்டும் என்பதே பெற்றோரின் கோரிக்கையாக உள்ளது
.இதுகுறித்து தமிழ்நாடு மாணவர் - பெற்றோர் கூட்டமைப்பு தலைவர் அருமைநாதன் கூறியதாவது: தமிழகத்தில் பெரும்பாலான தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிப்பதில்லை. அரசு நிர்ணயித்த கட்டணத்தின் நகலை எந்த பள்ளியும் பெற்றோருக்கு தெரியும்படி பள்ளியில் வைப் பதில்லை. அதை மறைத்து லட்சக்கணக்கில் நன்கொடை என்று வசூலிப்பதுடன் பள்ளியில் நீச்சல் பயிற்சி, நூலகம் என்பன உள்ளிட்ட பல வசதிகள் இருப்பதாக கூறி கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன் பிறகு மாணவர்களுக்கு அது போன்று எந்த பயிற்சியும் வழங்குவதில்லை. இதுகுறித்து அரசு அதிகாரிகளும் சம்பந்தப்பட்டவர்கள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இம்முறையாவது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment