இந்திய அளவில் வளர் இளம் பருவத்தில் பெண்கள் 56 சதவீதமும், ஆண்கள் 30 சதவீதமும் ரத்தசோகையால் பாதிக்கப்படுவதால் வரும் கல்வியாண்டில் 13 கோடி மாணவர்களுக்கு இரும்பு சத்து மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் 15 வயது முதல் 19 வயதுக்குள் 5 கோடிக்கும் மேற்பட்டோர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரும்புச் சத்து குறைபாடே இதற்கு முதன்மை காரணம். ரத்த சோகையால் பருவம் அடைதல்,மாதவிலக்கு மற்றும் மகப்பேற்றின் போது பெண்கள் உடல் ரீதியான பிரச்னைகளை சந்திக்கின்றனர். தொடர் சோர்வு மற்றும் கவனக்குறைவு போன்ற பிரச்னைகளால் படிப்பிலும் கவனம் குறையும். வாரம் தோறும் இரும்புச் சத்து மாத்திரை மற்றும் இரும்பு சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் இக்குறைபாட்டை சரி செய்ய அரசு முயற்சி எடுத்துள்ளது.
இதன் மூலம் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி களில் சுமார் 13 கோடி மாணவர்களுக்கு இந்தாண்டு மாத்திரைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. யுனிசெப் மூலம் இத்திட்டத்தை வரும் கல்வியாண்டில் செயல்படுத்த தன்னார்வலர் களுக்கு நேற்று சேலத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. யுனிசெப் அமைப்பைச் சேர்ந்த பாலமுருகன் கூறியதாவது: இந்தியாவில் 10 வயது முதல் 19 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளில் 56 சதவீதத்தினரும், ஆண் குழந்தைகளில் 30 சதவீதத்தினருக்கும் ரத்த சோகை இருப்பதாக தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு புள்ளி விவரம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் பெண் குழந்தைகளுக்கு மட்டும் ரத்தசோகை பாதிப்பு இருப்பதாக கணக்கில் கொண்டு இத்திட்டம் பள்ளிகளில் நடைமுறைப் படுத்தப்பட்டது.
இந்தாண்டு இத்திட்டத்தில் ஆண் குழந்தைகளும் சேர்க்கப்பட் டுள்ளனர். ரத்த சோகை, இரும்புச் சத்துக் குறைபாடு, மாணவர்களின் கற்றல் திறனை பாதிப்பதுடன், உடல் நலனிலும் பிரச்னைகளை உருவாக்கும். இப்பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்த இந்திய அரசு தேசிய ஊரக சுகாதார இயக்கம் மூலம் ‘வீக்லி அயர்ன் அண்டு போலிக் ஆசிட் சப்ளிமன்டேசன்‘ என்ற திட்டத்தை கடந்த 2013ம் ஆண்டில் இருந்து அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் செயல்படுத்தி வருகிறது. கடந்த கல்வியாண்டில் தலைமை ஆசிரியர்களுக்கு இது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. தொடர்ந்து இத்திட்டம் பள்ளிகளில் முழுமையாக செயல்படு த்தப்படுகிறதா என்பதை தன்னார்வலர்கள் மூலம் கண்காணிக்க உள்ளனர். இவ்வாறு பாலமுருகன் கூறினார்.
No comments:
Post a Comment