பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில், தேர்ச்சி குறைந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, இன்று நடக்கும் கூட்டத்தில், "டோஸ்' கொடுக்க கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு, கடந்த 9ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு, 23ம் தேதியும் வெளியானது. திருப்பூர் மாவட்டத்தில், பிளஸ் 2 தேர்வு எழுதிய 22,481 மாணவர்களில், 21,158 பேர் தேர்ச்சி பெற்றனர். மாவட்ட தேர்ச்சி விகிதம், 94.12 சதவீதத்தை எட்டியது. அதேபோல், பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய, 27,396 மாணவர்களில், 25,855 பேர் தேர்ச்சி பெற்றனர். மாவட்ட தேர்ச்சி, 94.38 சதவீதத்தை பிடித்தது. பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில், அரசு, அரசு உதவி பெறும், மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி விகிதம், கடந்த ஆண்டை விட, இந்தாண்டு அதிகரித்துள்ளது. இவ்விரு தேர்வுகளிலும், சில அரசு, மாநகராட்சி, அரசு உதவி பெறும் பள்ளிகள், தேர்ச்சியில் மிகவும் பின்தங்கியுள்ளன. சில பள்ளிகள், சென்டத்தையும் தவற விட்டுள்ளன. தேர்வு முடிவுகளை முழுமையாக கூர்ந்து ஆய்வு செய்துள்ள, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தேர்ச்சி விகித அடிப்படையில், பள்ளிகளை தரம் பிரித்துள்ளனர். பிஷப் உபகாரசாமி பள்ளியில் இன்று, காலை 10.00 மணிக்கு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடக்கிறது.
அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர்களுக்கு சமச்சீர் பாடப்புத்தகங்கள், சீருடை வழங்கு வது குறித்து, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படும். தேர்வு முடிவுகளை மையமாக கொண்டு, தேர்ச்சியில் முன்னேறியுள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்படும். அதேநேரம், பின்தங்கிய பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு "டோஸ்' கொடுக்கவும் கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தேர்ச்சி குறைந்த பள்ளிகளில், மாணவர் வருகை, போதுமான அளவு ஆசிரியர்கள் உள்ளனரா போன்ற காரணங்களையும் விசாரித்து, தீர்வு காண, முடிவு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment