Saturday, 10 May 2014

திருச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 64 பள்ளிகள் நூறு சதவிகிதத் தேர்ச்சி: 115 பேர் கணிதத்தில் 200 மதிப்பெண்கள்

திருச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 64 பள்ளிகள் நூறு சதவிகிதத் தேர்ச்சியைப் பெற்றுள்ளன. மாவட்டத்தில் 77 அரசு மேல்நிலைப் பள்ளிகள் இருந்தும் 6 அரசுப் பள்ளிகள்தான் இத்தேர்ச்சியை அடைந்திருக்கின்றன.
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட நிலையில், மாவட்டத்தில் 100 சதவிகித தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் விவரங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே. செல்வக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
மாவட்டத்தில் 77 அரசுப் பள்ளிகள், 69 அரசுஉதவி பெறும் பள்ளிகள், 13 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள்,1 மாநகராட்சிப் பள்ளி, 40 மெட்ரிக் பள்ளி உள்பட 213 பள்ளிகளைச் சேர்ந்த 31,401 பேர் தேர்வெழுதி, 29629 பேர்தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாவட்டத்தில் 64 பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சியை பெற்றிருக்கின்றன. இதில் கொளக்குடி, மூவானூர், கல்லகம், சா. அய்யம்பாளையம், வாழையூர், திருச்செந்துறை ஆகிய 6 அரசுப் பள்ளிகள் மட்டுமே நூறு சதவிகிதத் தேர்ச்சியைப் பெற்றுள்ளன.
இதரப் பள்ளிகள் விவரம்: 15 அரசு உதவி பெறும் பள்ளிகள், 10 சுயநிதிப் பள்ளிகள், 30 மெட்ரிகுலேசன் பள்ளிகள், தலா ஒரு பார்வையற்ற அரசு மகளிருக்கான மேல்நிலைப் பள்ளி, மாநகராட்சிப் பள்ளி, அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளி நூறு சதவிகித தேர்ச்சியை பெற்றன.
அதிக மாணவர்கள் தேர்வு எழுதியது: திருச்சி சமயபுரம் எஸ்.ஆர்.வி. மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் அதிகளவாக தேர்வெழுதிய 1156 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். எம். புதுப்பட்டியைச் சேர்ந்த எஸ்.பி. மெட்ரிகுலேசன் பள்ளியில் குறைந்தளவாக தேர்வெழுதிய 2 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிகபட்சமாக கணிதத்தில் 115 மாணவ, மாணவிகள் 200-க்கு 200 மதிப்பெண்களை பெற்றுள்ளனர். குறைந்தளவாக விலங்கியலில் ஒரு மாணவர் மட்டும் 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
பாடப்பிரிவின் பெயர், 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்ற மொத்த மாணவர்கள் எண்ணிக்கை என்ற அடிப்படையில் விவரம்:
இயற்பியல் -57, வேதியியல் - 65, உயிரியியல் - 21, விலங்கியல் -1, கணினி அறிவியல் -33, கணிதம் -115, பொருளாதாரம் -24, வணிகவியல் - 108, கணக்குப் பதிவியல்-86, வணிக கணிதம் - 27,
நூறு சதவிகித தேர்ச்சி பெற்ற பாடப்பிரிவுகள் (தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் எண்ணிக்கை) விவரம்:
புள்ளியியல் - 126, உயிரி- வேதியியல் -28, செவிலியர் -295, ஊட்டச்சத்து மற்றும் உணர்வுவிதி துறை -91.

No comments:

Post a Comment