Thursday, 1 May 2014

5 மாதங்களாக ஊதியம் கிடைக்காமல் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் அவதி - கல்வித் துறை நடவடிக்கை எடுக்குமா?


தனியார் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் 5 பேருக்கு 5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததைத் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். தொடக்கக் கல்வித் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பாதிக்கப்பட ஆசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது.

சிவகங்கை மாவட்டம், ஒக்கூர் கிராமத்தில் அரசு நிதி உதவி பெறும் தொடக்கப் பள்ளியையும், உயர்நிலைப் பள்ளியையும் ஒரே நிர்வாகம் நடத்தி வருகிறது. இந்த இரண்டுப் பள்ளிகளுக்கும் முகமையாக (ஏஜெண்ட்) இருந்தவர் கடந்த 14.11.2013 அன்று இறந்து போனார். பள்ளிகளின் முகமை இறந்து போனதால் நிர்வாகக் கமிட்டி அமைக்கப்படவில்லை. இந்நிலையில் உயர்நிலைப் பள்ளியில் பணிபுரியும் 21 ஆசிரியர்களுக்கு மாவட்டக்கல்வி அலுவலர் நேரடி ஊதியம் வழங்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து உயர்நிலைப் பள்ளியின் ஆசிரியர்கள் ஊதியம் பெற்று வருகின்றனர். ஆனால் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான ஊதியம் மட்டும் கடந்த 5 மாதங்களாக வழங்கப்படவில்லை.

இதனால் பள்ளியின் 5 ஆசிரியர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பள்ளிக் கல்விக் குழு முகமை இறந்ததால் முகமை கலைக்கப்பட்டதாகக் கருதி மேல்நிலைப் பள்ளிக்கு சிவகங்கை மாவட்டக் கல்வி அலுவலர் (பொ) அனுப்பி உள்ளசெயல்முறைகள் ந.க.எண் 5967/ஆ1/13/24.12.2013 தேதியிட்ட உத்தரவு விவரம். ஒக்கூர் தனியார் மேல்நிலைப் பள்ளியின் முகமையாக இருந்தவர் 14.1.2013ல் இயற்கை எய்தி விட்டதாக பள்ளியின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளின் ஒழுங்குபடுத்தப்பட்ட சட்டம் 1973 மற்றும் விதிகள் 1974 விதிகள் 12(1)(4) மற்றும் 3(1) ஆகியவற்றின்படி அனைத்து தனியார் பள்ளியும் கல்வி முகமை மூலம் தான் பள்ளிக்குழுமை அமைக்க வேண்டும்.

இப்பள்ளிக்குழுவில் நிர்வாகம் சார்பாக உறுப்பினர்களில் ஒருவரை பள்ளிக் குழுத் தலைவராகவும், மற்றொருவரை பள்ளிக்குழு செயலராகவும் பள்ளிக் கல்வி முகமைநியமிக்க வேண்டும். தற்போதைய பள்ளிக்குழுவை அனுமதிக்கும் கல்வி முகமை இயற்கை எய்திவிட்டதால் அவரால் அமைக்கப்பட்ட பள்ளிக் குழுவும் தானாகவே செயல் இழந்து விட்டதாகக் கருதப்படுகிறது.

இனிமேல் புதிய கல்வி முகமை அமைக்கப்பட்டு தமிழநாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் ஒப்புதல் பெறப்பட்ட பின்னர் தான் அந்த கல்வி முகமை புதிய கல்விக் குழுமை அமைக்க வேண்டும். இந்தச் சூழலில் இப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர், அலுவலகப் பணியாளர்களின் பணப்பலன்களைப் பெற்றுத் தருதல் போன்ற நிர்வாகத்தைக் கவனிக்க வேண்டியது அவசியமாகும். இது போன்ற சிறப்பு நிகழ்வுகளில் மாவட்டக் கல்வி அலுவலர் சம்மந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியருக்கோ அல்லது பிற ஆசிரியர்களுக்கோநேரடி மானியத்தை வழங்கலாம் என தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளின் ஒழுங்குபடுத்தப்பட்ட சட்டம் 1973 மற்றும் 1974 விதி 19ன் கீழ் இணைப்புIII, IIல் மாவட்ட கல்வி அலுவலருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகளில் நேரடி மானிய முறையை நடைமுறைப்படுத்தும் போது முன் அறிவிப்பு கொடுக்க வேண்டியது இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் நீதி பேராணை வழக்கு எண் 4438/78ல் தீர்ப்பு அளித்துள்ளது.

இந்த தீர்ப்பாணையை உதாரணமாகக் கொண்டு ஒக்கூர் தனியார் மேல்நிலைப் பள்ளியின் பள்ளிக் குழு செயல் இழக்கப்பட்டதைக் கருதி நேரடி மானிய முறையைஉடனடியாக நடைமுறைப்படுத்த ஆணையிடப்படுகிறது. இதன்படி ஒவ்வொரு மாதத்திற்கும் பணியாளரின் மான்யம் மட்டும் தற்போது வழங்கப்படும், இதர பணப்பலன்கள் பெறுவதற்கு அனுமதி கோரும் தலைமை ஆசிரியர் மற்றும் பணியாளர்களின் விண்ணப்பங்களை தலைமை ஆசிரியர் அனுப்பி வைக்க வேண்டும். நேரடி மானிய முறையில் இருக்கும் பள்ளியில் மாவட்டக் கல்வி அலுவலரே செயலர் அந்தஸ்தில் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் மூலம் பள்ளிக் குழு முகமை இறந்ததால் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியம் ஆசிரியர்கள், பணியாளர்கள் தங்களது ஊதியத்தை தொடர்ந்து பெற்றுவருகின்றனர்.

இது போன்று தொடக்கப் பள்ளிக்கான முன்னுதாரணம் :சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை சரகம், பள்ளத்தூர் அரசு உதவி பெறும் சிறுபானஅமையற்ற அழகம்மை ஆச்சி நினைவு தொடக்கப் பள்ளியின் முகவர் மற்றும் செயலரின் நியமன ஒப்புதல் ரத்து செய்யப்பட்டதை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் ஏற்றுக் கொண்டு சாக்கோட்டை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ஆசிரியர்களுக்கான கற்பிப்பு மானியத்தை மட்டும் பெற்று வழங்கவும், பிற பணப் பலன்களை தொடக்கக் கல்வி இயக்குநரின் ஒப்புதல் பெற்ற பின்னர் பள்ளிக்கு வழங்க வேண்டும் என மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் செயல்முறைகள் ந.க.எண்600/அ4/2013 தேதியிட்ட கடிதம் மூலம் நேரடி மானிய முறைய நடைமுறைப்படுத் ஆணையிட்டுள்ளார்.

ஒக்கூரில் ஒரே நிர்வாகம் நடத்தி வரும் பள்ளிகளில் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியமும், தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு 5 மாதங்களாக ஊதியம் வழங்காமல் இருப்பது ஆசிரியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொருளாளர் அ.ஜோசப் சேவியர் கூறுகையில் இரு மேற்கோள்களைக் காட்டியும் சிவகங்கை தொடக்கக் கல்வி அலுவலர் நேரடி மானிய முறையை தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு வழங்காதது கண்டிக்கத் தக்கது என்றார்.

மாவட்ட நிர்வாகம் இந்தப் பிரச்சனையில் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் கோரிக்கையாகும்.

No comments:

Post a Comment