விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நரையன்குளம் ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் கோடைக் காலத்தைப் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும் என்ற நோக்கில் இலவசமாக யோகா, கராத்தே மற்றும் ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா வியாழக்கிழமை பள்ளியில் நடைபெற்றது.
விழாவிற்கு தலைமை ஆசிரியை இ.ஜெஸிந்தா தலைமை தாங்கினார். ஆசிரியை பா.விஜயராணி வரவேற்றார்.
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சி.பாலமுருகன் பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்துப் பேசுகையில் கூறியதாவது: தமிழ்நாட்டில் இதுபோன்ற ஒரு ஊராட்சி ஒன்றியப் பள்ளியில், கோடை விடுமுறையை மாணவர்கள் பிரயோஜனம் உள்ள வகையில் பயன்படுத்த வேண்டும் என்று அவர்கள் நலனில் அக்கறை கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இங்கு தான் நடைபெற்றுள்ளது. இது தொடக்கக் கல்வித் துறைக்கு பெருமை சேர்ப்பதாகும்.
நல்ல ஒரு முன் உதாரணம். அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் இக் கிராம மாணவர்கள் வெளியே சுற்றிக்கொண்டு திரியும் போது, ஊராட்சி ஒன்றியப் பள்ளி மாணவர்கள் விடுமுறை நாளிலும் பள்ளிக்கு வந்து இதுபோன்ற கல்வியுடன் தொடர்புடைய வாழ்க்கைக்குப் பயனுள்ள காரியங்களைக் கற்றுக் கொள்வது சிறப்பாக உள்ளது.
பல்வேறு போட்டிகளின் மத்தியில் ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கும், இருக்கும் மாணவர்களைத் தக்க வைத்துக் கொள்வதற்கும் ஆசிரியர்கள் தங்களது ஊதியத்திலிருந்து பணத்தை எடுத்து, மாணவர்களின் நலனுக்காக பயன்படுத்துவது நல்ல முன் உதாரணம். மாணவர்கள் இந்த வாய்ப்புகளை பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
மாணவர்களுக்கு இந்த 30 நாட்களும் மம்சாபுரம் உலக சமாதான ஆலயத்தைச் சேர்ந்த அருள்செல்வம், சின்னத்தம்பி மற்றும் காளீஸ்வரி ஆகியோர் பல்வேறு யோக ஆசனங்களைக் கற்றுக் கொடுக்கிறார்கள். கராத்தே மாநில தலைமைப் பயிற்சியாளர் சென்சாய் எம்.செபஸ்தியான் தலைமையில் சிறப்பு கராத்தே பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஆங்கிலப் புலமை பெற்ற பயிற்சியாளர் சிவசுப்பிரமணியன் மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுப் பயிற்சியை அளிக்கிறார். இதில் இப் பள்ளியில் படிக்கும், கலந்து கொள்ள விருப்பமும் ஆர்வமும் உள்ள 90 மாணவ மாணவியர் கலந்து கொண்டுள்ளனர். பயிற்சி நிறைவில் இவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியை ச.பொன்மலர் செய்துள்ளார்.
No comments:
Post a Comment