Monday, 19 May 2014

பள்ளி, உயர் கல்விக் கொள்கைகளில் மாற்றம் தேவை


புதிதாக அமையவிருக்கும் மத்திய அரசு, பள்ளி, உயர் கல்வி, தொழில்நுட்பக் கல்விக் கொள்கைகளில் மாற்றம் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறோம் என்று வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார்.

சென்னையை அடுத்த படப்பை தானீஷ் அகமது பொறியியல் கல்லூரியின் 8-ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில், 300 மாணவர்களுக்கு வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் பட்டங்கள் வழங்கி பேசியது:

நாட்டில் கல்வித் தரம் உயர்த்தப்பட வேண்டும். பல்கலைக்கழகங்களின் தரம் சர்வதேச அளவில் உயர்த்தப்பட வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக இருந்தாலும், அதற்கான நடவடிக்கை, செயலாக்கத்தில் நாம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறோம்.

சர்வதேச தரமிக்கப் பல்கலைக்கழகம் பற்றி பேசுவதற்கு முன், அடிப்படையான பள்ளிக் கல்வித் தரத்தில் நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். தற்போது சர்வதேச அளவில் பள்ளிக் கல்வியில் பிரிட்டனை பின் தள்ளி விட்டு பின்லாந்து முதலிடம் வகிக்கிறது. தென் கொரியாவில் பள்ளிகளில் தினமும் 10 மணிநேரம் பாடங்கள் நடத்தப்படுகின்றன. இரு நாடுகளில் உள்ள பள்ளிகளுக்கும் நேரில் சென்று, ஆய்வு மூலம் அறிக்கை தயாரித்து, இந்திய கல்வி வளர்ச்சிக் கழகம் சார்பில் புதிதாக பொறுப்பேற்க இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆகியோரிடம் வழங்க திட்டமிட்டுள்ளோம்.

செயல்பட்டு வந்த பல்கலைக்கழகங்களை மூடுவதில் தான் கடந்த ஆட்சியில் அக்கறை செலுத்தப்பட்டதே தவிர, சுட்டிக் காட்டப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து அவற்றை மேம்படுத்த உரிய ஊக்கம் தரப்படவில்லை.

பொறியியல் கல்விக்கு அடுத்தபடியாக மருத்துவக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் மருத்துவக் கல்விக் கட்டணம் மட்டுமல்லாமல் மருத்துவச் செலவும் குறையும். கல்வித்தரம் உயர அதிக அளவில் கல்லூரிகளுக்குத் தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும் என்று 10-ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் வலியுறுத்தப்பட்டும், இன்றுவரை முழுமையாக செயல்படுத்தப்படவில்லை.

புதிய அரசு கல்லூரிகளுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குவதை ஊக்குவிக்க வேண்டும். உயர் கல்வி, தொழில்நுட்பக் கல்வி தொடர்பாக அரசு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், பல்கலைக்கழகங்கள், கல்வியாளர்கள், முதுபெரும் அறிஞர்கள் அனைவரையும் அழைத்து வெளிப்படையான பேச்சுவார்த்தை, கலந்தாய்வு நடத்த முன்வர வேண்டும் என்பது எங்களது எதிர்பார்ப்பாக உள்ளது என்றார். விழாவில் கல்லூரி தலைவர் கே.மூசா, முதல்வர் ஜி.கே.விஜயராகவன், இயக்குநர் சாய்பில் அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment