Thursday, 8 May 2014

தபால் ஓட்டுக்கள் தாமதம் குறித்து நடவடிக்கை : தலைமை தேர்தல் அலுவலர் தகவல்

தபால் ஓட்டுக்கள் தாமதம் குறித்து, நடவடிக்கை எடுக்கப்படுகிறது,'' என, மதுரையில் தமிழக தலைமை தேர்தல் அலுவலர் பிரவீன்குமார் கூறினார். மதுரை முதல் கன்னியாகுமரி வரையிலான 8 மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன், தலைமை தேர்தல் அலுவலர் பிரவீன்குமார், நேற்று ஆலோசனை நடத்தினார். மதுரை கலெக்டர் சுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக, பிரவீன்குமார் கூறியதாவது: மே 16 ல் நடக்கும் ஓட்டு எண்ணிக்கை குறித்து சென்னை, கோவை, திருச்சி, மதுரையில் அலுவலர்களுக்கு 4 கட்ட 
பயிற்சிகள் நடத்துகிறோம். ஓட்டு எண்ணிக்கையின் போது பாதுகாப்பு, ஓட்டுப்பதிவு 
இயந்திரத்தை பயன்படுத்தி எண்ணுவது, முடிவுகளை வெளி யிடுவது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
தேர்தல் அலுவலர்களுக்கு தபால் ஓட்டுக்கள் வழங்கப் படவில்லை என்ற புகார்கள் வந்துள்ளன. இதுதொடர்பாக அலுவலர்களிடம் அறிக்கை கேட்டுள்ளேன். சிலர் தபால் ஓட்டுக்கள் தாமதமாக வழங்கப்
பட்டுள்ளது, சிலவற்றில் பகுதி எண், வரிசை எண் குறிப்பிடாமல் வழங்கியதாக, புகார் தெரிவித்துள்ளனர்.
மொத்த தபால் ஓட்டுக்கள், எத்தனை ஓட்டுக்கள் வழங்கப்பட்டன என அறிக்கை வந்தபின், நடவடிக்கை எடுக்கப்படும். தி.மு.க.,வினர் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என, அக்கட்சி தலைவர் கூறியுள்ளார். புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சில புகார்கள் குறித்து வழக்குகள் உள்ளது. அதுகுறித்து இப்போது கூற இயலாது. மேலூர் தொகுதி ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் மழைநீர் புகுந்தது குறித்து, அன்றிரவு வேட்பாளர்கள் முன்னிலையில் பார்வையிட்டோம். இயந்திரத்திற்குள் தண்ணீர் செல்லவில்லை. சுவரில் தான் ஈரப்பதம் இருந்துள்ளது. 
தற்போது மழை பெய்வதால், தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சேலம் உட்பட இரு தொகுதிகளில் மறுஓட்டுப்பதிவு நடப்பதற்கு, ஓட்டுப்பதிவு இயந்திர தயாரிப்பு கோளாறு தான் காரணம். இது புதிய வகை இயந்திரம் என்பதால் தவறு நடந்துள்ளது. அதை கண்டறிந்ததால், மறுஓட்டுப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டது.
தேர்தலில் பணம் பட்டுவாடா வருத்தமளிக்கிறது. அதை எந்தக் கட்சி செய்தது என கூற முடியாது. கடைசி 2 நாட்களில் கூடுதலாக பட்டுவாடா செய்யப்பட்டது. ஓட்டு எண்ணிக்கையின் போது, ஒவ்வொரு ரவுண்ட் எண்ணி முடித்ததும், வேட்பாளரின் ஏஜென்ட்களுக்கு, மேஜை வாரியாக விபரங்கள் பிரதியெடுத்து, வழங்கப்பட உள்ளதால், ஓட்டு எண்ணிக்கை தாமதமாக செய்யும். முறைகேடின்றி நடத்த, தாமதமானாலும் பரவாயில்லை, என்றார்.

No comments:

Post a Comment