Thursday, 5 June 2014

நாட்டில் 12 சதவீத பள்ளிக் குழந்தைகளுக்கு கற்றலில் குறைபாடு


நாட்டில் பள்ளி செல்லும் குழந்தைகளில் 12 சதவீதம் பேருக்கு கற்றலில் குறைபாடு உள்ளதாக "சங்கல்ப்' அமைப்பின் நிறுவனர் என்.ஆர்.கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.

கற்றலில் குறைபாடுள்ள மாணவர்களுக்காக சங்கல்ப் அமைப்பின் சார்பில் தொடங்கப்படவுள்ள "சங்கல்ப் வாழ்க்கைத் தொழில் கல்வி' எனும் கல்வித் திட்ட விளக்க நிகழ்ச்சி சென்னையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) நடைபெற்றது. நிகழ்ச்சியில் என்.ஆர். கிருஷ்ணகுமார் செய்தியாளர்களிடம் கூறியது:

"சங்கல்ப்' அமைப்பானது கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு கல்வி வழங்கி வருகிறது.

தற்போது கற்றலில் குறைபாடுள்ள மாணவர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுத்தரும் விதமாக "சங்கல்ப்' வாழ்க்கை தொழில் கல்வி' திட்டத்தை நடப்பாண்டு முதல் தொடங்க உள்ளது.

தற்போது நாட்டில் பள்ளி செல்லும் குழந்தைகளில் 12 சதவீதம் பேருக்கு கற்றலில் குறைபாடு உள்ளது. இவர்களால் படித்து முடித்தவுடன் சரியான வேலைவாய்ப்பை பெற முடிவதில்லை. இதனைப் போக்கும் விதமாக தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பாடத் திட்டத்தின்கீழ், சில்லறை விற்பனைத்துறையில் வாடிக்கையாளர் சேவை குறித்த பயிற்சியை அளிக்க உள்ளோம்.

இதற்காக எட்டு மாத முழுநேர படிப்பை இந்த ஆண்டு அறிமுகப்படுத்த உள்ளோம்.

அதில் பில்லிங், பார்கோடிங், கடன் அட்டைகளை கையாளுதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படும். 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இந்தப் பயிற்சியில் சேரலாம். 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புகளில் 60 சதவீதத்துக்கும் குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்கள் மற்றும் கற்றலில் குறைபாடு உள்ளவர்களுக்கு பயிற்சியில் சேர முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment