தமிழகத்தில் பணி நீக்கப்பட்ட 652 கணினி ஆசிரியர்கள், மீண்டும் பணி கோரி, ஜூன் 15 முதல் அவரவர் வீடுகளில் குடும்பத்தினருடன் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர். முதல்வர் ஜெயலலிதாவிற்கு அவர்கள் எழுதிய கடிததத்தில் கூறியுள்ளதாவது:
1998 முதல் அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியராக, மாதம் ரூ.2 ஆயிரம் சம்பளம் பெற்று, வேலைக்கு சேர்ந்தோம். 2007 ல் அரசு கணினி பயிற்றுனராக நியமிக்கப்பட்டோம். 14 ஆண்டுகள் இளமை, அறிவையும் மாணவர்களுக்காக அர்ப்பணித்தோம். தற்போது 45 வயதை கடந்த நிலையில், 2013ல் நீக்கப்பட்டோம். பல கடன்கள் பெற்று, திருப்பி செலுத்த வழியின்றி, குடும்பத்தினர் கஷ்டத்தில் உள்ளனர். 2007 ல் சிறப்பு ஆசிரியர் தேர்வு நடத்தப்பட்டது. அதில், 50 சதவீதம் மதிப்பெண் எடுக்க வேண்டும் என, முதலில் கூறப்பட்டு பின்னர், 35 சதவீதம் போதும் என எங்களை பணியில் சேர்த்தனர். பிறகு நடத்தப்பட்ட மறுதேர்வில், 42 கேள்விகள் தவறு என முறையிட்டோம். சென்னை ஐ.ஐ.டி., வல்லுனர் குழுவும் வினாத்தாளை ஆய்வு செய்து, '20 கேள்விகள் முற்றிலும் தவறு. ஏழு கேள்விகளுக்கு பதில் கூற முடியவில்லை' என தெரிவித்தது. 27 கேள்விகள் தவறு என்றால் யாரால் தேர்ச்சி பெற முடியும். தவறான கேள்விகள் என கண்டறியவே தேர்வு எழுதிய மூன்று மணி நேரத்தில் பாதி நேரம் செலவழிந்தது. தவறான கேள்விகள் கொடுத்து எங்கள் வாழ்வை சீரழித்து விட்டனர். நடந்து முடிந்த முதுகலை தமிழாசிரியர் தேர்வில் 21 தவறான கேள்விக்கும், ஆசிரியர் தகுதி தேர்வில் 5 தவறான கேள்விக்கும், பிளஸ் 2 கணித தேர்வில் கூட, 6 தவறான கேள்விகளுக்கும் மதிப்பெண் கொடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது நினைத்தால் கூட எங்களுக்கு வழங்கப்பட்ட தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்கலாம். இவ்வாறு கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment