Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Sunday 20 October 2013

ஓவிய வடிவில் திருக்குறள் தந்துள்ள ஓவியர் நடராஜன்



லகின் மூத்த, இனிய, ஒப்புவமையற்ற மொழியான தமிழ் மொழியில் எண்ணற்ற காப்பியங்கள் இயற்றப்பட்டுள்ளன. இவைகளில் தனிச்சிறப்பு கொண்டது திருக்குறள்.
வாழ்க்கைக்கு தேவையான அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பாலையும் 1330 குறளில் வடித்திட்ட வள்ளுவனின் வார்த்தைகள் இன்றைய காலகட்டத்திற்கும் ஒத்துவருவதுதான் மிகப் பெரிய விஷயம்.

இதன் காரணமாகவே திருக்குறள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உலக பொதுமறையாக போற்றப்படுகிறது. இரண்டாயிரம் வருடங்களை தாண்டியும் இப்போதும் திருக்குறளுக்கு உரை பலரும் எழுதிக் கொண்டுதான் இருக்கின்றனர்.
ஆனால் ஒரே ஒருவர் மட்டும் 1330 குறளுக்கும் ஏற்ப ஓவியம் வரைந்துள்ளார்.
அவர் பெயர் நடராஜன், திருப்பூர் பக்கம் உள்ள நல்லூர் விஜயாபுரத்தில் குடியிருக்கும் இவர் ஒரு நல்லாசிரியர் விருது பெற்ற ஓவிய ஆசிரியராவார். இப்போது பணி ஓய்வு பெற்றுவிட்டாலும் ஓவியப்பணியில் இருந்து ஓய்வு பெறாமல் எப்போதும் தூரிகையும், கையுமாகவே இருப்பவர். பித்தன் சித்ர கூடம் அமைத்து இலவசமாக ஓவிய பயிற்சியளித்து வருபவர்.
சிறு வயது முதலே இயற்கை காட்சிகள், சாமி படங்கள், தேசிய தலைவர்கள், மனித நேயமிக்கவர்களை ஓவியங்களாக வரைந்தவர், யாரும் செய்திடாத ஒரு சாதனையை படைத்திட எண்ணினார்.
அப்போதுதான் இவரை பெரிதும் ஈர்த்திட்ட திருக்குறளை ஏன் ஓவியமாக வரைந்திடக்கூடாது என்று முடிவு செய்து களமிறங்கினார். ஒவ்வொரு குறளுக்கும் ஏ3 பேப்பரில் தத்ரூபமாக குறளுக்கு ஏற்ப ஓவியம் வரைய ஆரம்பித்தார்.
இது பற்றி ஓவியர் நடராஜன் கூறுகையில், "அதிகாலை மூன்று மணிக்கு ஓவியம் வரைய ஆரம்பித்தேன். குறளின் அர்த்தத்தை நன்றாக உள்வாங்கி அதே நேரத்தில் எளிமைப்படுத்தும் விதத்தில் வரைந்தேன். வரைந்தேன் என்பதை விட வள்ளுவரோடு ஓரு வருட காலத்திற்கு மேல் வாழ்ந்தேன் என்றே சொல்லலாம். அதிலும் 250 குறள் மட்டுமே உள்ள இன்பத்து பாலை வரையும்போது அதிகம் கவனம் எடுத்துக்கொண்டேன் காரணம் கோடு கொஞ்சம் மாறினாலும் தவறான அர்த்தத்தையும் கொடுத்து விடுமே. ஆனால் எல்லாம் நல்லபடியாகவே முடிந்தது, காரணம் முன்பே சொன்னது போல வள்ளுவர் துணை நின்றதால்'' என்று சந்தோஷத்துடன் குறிப்பிட்டார்.
அகர முதல எழுத்தெல்லாம் எனும் முதல் குறளில் துவங்கி 1330 குறளுக்கும் ஓவியம் வரைந்து முடித்திட்ட போது அது 13 தொகுதிகளை கொண்டிருந்தது. இதற்கு திருக்குறளோவிய மத நல்லிணக்க தேசிய ஒருமைப்பாட்டு ஓவியப்பேழை' என்ற தலைப்பிட்டுள்ளார்.
இந்த குறளோவிய பேழையை போட்டோ பிரின்ட் மூலமாக கையடக்க புத்தகமாகவும், சிடியாகவும் மாற்றி முதல்வர் மூலமாக வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளார். இந்த முயற்சி வெற்றி பெறுவதை அடுத்து பாரதியார் கவிதைகள் துவங்கி இனியவை நாற்பது வரையிலான பல்வேறு தமிழ இலக்கியங்களையும் ஓவியமாக படைத்திட எண்ணியுள்ளார்.
இவரது எண்ணமும், எழுத்தோவியமும் வெற்றி பெறட்டும்.
இவருடன் தொடர்பு கொள்ள: 99762 55579, 0421-2375124.

No comments:

Post a Comment