தமிழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டில் (2014-15) எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர மொத்தம் 27,876 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த கல்வி ஆண்டில் மொத்தம் 29,569 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண் அதிகரித்துள்ளதையடுத்து எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர இடம் கிடைக்காது என்ற அச்சத்தில் 1,693 பேர் குறைவாக, மொத்தம் 27,876 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். சென்னை உள்பட 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 2,172 எம்.பி.பி.எஸ். இடங்களில் சேர கடும் கட்-ஆஃப் மதிப்பெண் போட்டி ஏற்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க கடந்த மே 14-ஆம் தேதி விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. விண்ணப்பத்தைப் பெறுவதற்கான காலக்கெடு கடந்த மே 30-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. மொத்தம் 30,380 மாணவர்கள் விண்ணப்பத்தைப் பெற்றனர். பூர்த்தி செய்த விண்ணப்பம் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு வந்து சேர திங்கள்கிழமை (ஜூன் 2) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.
கடைசி நாளில் 5,254 மாணவர்கள்: இதையடுத்து சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலகத்துக்கு ஏராளமானோர் திங்கள்கிழமை நேரடியாக வந்து அங்கு வைத்திருந்த பெரிய மரப் பெட்டியில் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தனர். கடைசி நாளான திங்கள்கிழமை மட்டும் 5,254 மாணவர்கள் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துள்ளனர்.
தொடர்ந்து ரேண்டம் எண் வெளியீடு, தரவரிசைப் பட்டியல், கலந்தாய்வு குறித்து மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி கூறியதாவது:
ஜூன் 9-இல் ரேண்டம் எண்: எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களில், ஒரே கட்-ஆஃப் மதிப்பெண்ணைப் பெற்றுள்ள மாணவர்களை வரிசைப்படுத்தி சமவாய்ப்பு எண் (ரேண்டம் எண்) வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது. எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள 27,876 மாணவர்களை வரிசைப்படுத்த வரும் 9-ஆம் தேதி ரேண்டம் எண் ஒதுக்கப்படும்.
முதல் கட்ட கலந்தாய்வு: மாணவர்கள் பெற்றுள்ள கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் வரும் 12-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் வெளியிடப்படும். தொடர்ந்து சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கத்தில் முதல் கட்ட கலந்தாய்வு தொடங்கும். எம்.பி.பி.எஸ். இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 27-ஆம் தேதியும் இறுதிக்கட்ட கலந்தாய்வு செப்டம்பர் முதல் வாரத்திலும் தொடங்கும் என்றார் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி.
No comments:
Post a Comment