Monday, 2 June 2014

படிப்புக்கு வயது தடையில்லை: 78 வயதில் முனைவர் பட்டம் பெற்ற ஆசிரியர்


படிப்புக்கு வயது தடையில்லை என்பதை ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் நிரூபித்து இருக்கிறார். அவரது பெயர் ராஜமாணிக்கம். திருச்செங்கோட்டை அடுத்த வேலக்கவுண்டம்பட்டி அருகே உள்ள ஏழுர் கிராமத்தை பூர்வீகமாக கொண்ட இவர் திண்ணைப் பள்ளியில் ஆசிரியராக பணியை தொடங்கி பின்னர் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியராகவும், சேலம், நாமக்கல், தர்மபுரி, தஞ்சை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றார். என்.சி.சி. கமாண்டராகவும் பணியாற்றி இருக்கிறார்.

1953–ம் ஆண்டு திருச்செங்கோடு ஜில்லா போர்டு நாட்டாண்மை கழக பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி படித்து பின்னர் பி.ஏ., எம்.ஏ, பி.டி. பட்டங்களை பெற்றார். ஆசிரியர் பணியில் பணியாற்றினார்.

பிறகு ஆங்கில மொழி பயிற்றுனருக்கான பயிற்சியை பெங்களுரில் உள்ள பெங்களுர் ரீஜனல் இன்ஸ்டிடியூட்டில் பெற்று 12 ஆண்டுகள் ஆசிரியர் பயிற்றுனராக பணியாற்றி 91–ம் ஆண்டு ஓய்வு பெற்றார். பின்னர் தனியார் மெட்ரிக் பள்ளியில் 5 ஆண்டுகள் முதல்வராக பணியாற்றினார்.

தற்போது இவருக்கு 78 வயதாகிறது. இந்த வயதிலும் இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் மொழியியல் பாடத்தில் தமிழ்–ஆங்கில மொழி ஒப்பாய்வு என்ற தலைப்பில் ஆய்வு செய்து பி.எச்.டி பட்டம் பெற்று உள்ளார்.

பி.எச்.டி பட்டம் பெற்றது குறித்து இவர் கூறியதாவது:–

ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும் நான் தொடர்ந்து கல்விப் பணியாற்றி வருகிறேன். 2009–ல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மொழியியல் பாடத்தில் எம்.ஏ. பட்டமும், வேறொரு பல்கலைக்கழகத்தில் 2010–ம் ஆண்டில் எம்.பில். பட்டமும் பெற்றேன்.

கல்வி பயில வயது தடையில்லை என்பதை விளக்க நான் தற்போது பி.எச்.டி பட்டம் பெற்று உள்ளேன்.

எல்லோரும் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டும். தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அடுத்து டி.லிட் என்னும் முது முனைவர் பட்டத்திற்கான திருக்குறள் சார்ந்த ஆராய்ச்சியை மேற்கொள்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம் இவரை பராட்டி ஏற்கனவே மாமனிதர் விருது வழங்கி உள்ளது. மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கான ஆங்கில இலக்கண நூலையும். ஆங்கில மொழி ஆர்வலர்களுக்கான இலக்கண நூலையும் வெளியிட்டு உள்ளார். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து இருக்கிறார். தமிழ்–ஆங்கில அகராதியில் 12 ஆயிரம் புதிய சொற்களுக்கு விளக்கத்தை கண்டுபிடித்து உள்ளார்.

No comments:

Post a Comment