Wednesday, 4 June 2014

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு: விண்ணப்பிக்க காலக்கெடு ஜூன் 30 வரை நீட்டிப்பு

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை அறிவித்துள்ளார்.
முன்னதாக இந்த ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மே 31 வரை நீட்டிக்கப்பட்டது. இப்போது விண்ணப்பிக்கும் தேதி மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பங்களை அந்தந்த தனியார் பள்ளிகளில் பெற்றோர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
அதோடு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகங்கள், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வித்துறை அலுவலகங்களிலும் விண்ணப்பங்களைப் பெறலாம்.
பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த அலுவலகங்களிலேயே சமர்ப்பிக்கலாம் என ஆர்.பிச்சை அறிவித்துள்ளார்.
இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் (சிறுபான்மையின பள்ளிகள் தவிர) அறிமுக வகுப்புகளான எல்.கே.ஜி., முதல் வகுப்பு, ஆறாம் வகுப்புகளில் 25 சதவீத இடங்களை பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் நலிவடைந்த பிரிவினருக்கு ஒதுக்க வேண்டும்.
தமிழகத்தில் இந்த ஒதுக்கீட்டின் கீழ் 58,619 இடங்கள் உள்ளன. கடந்த ஆண்டு இதில் 40 சதவீத இடங்களே நிரப்பப்பட்டன.
இந்த ஆண்டு இந்த ஒதுக்கீட்டின் கீழ் 100 சதவீத இடங்களை நிரப்ப வேண்டும் என ஏற்கெனவே அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு இந்த ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணத்தை அரசு திருப்பி வழங்கவில்லை எனக் கூறி இந்த ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கையை இந்த ஆண்டு நடத்தமாட்டோம் என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவித்தது.
இதையடுத்து, மூன்று மாதத்தில் இந்தக் கட்டணம் திருப்பி வழங்கப்படும் என மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் உறுதி அளித்தது. அதனடிப்படையில், இந்த ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கையை தனியார் பள்ளிகள் நடத்தி வருகின்றன.
இந்த ஒதுக்கீட்டின் கீழ் யார் விண்ணப்பிக்கலாம்?
பொருளாதார, சமூக ரீதியாக நலிவடைந்த பிரிவினர் இந்த 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
தமிழக அரசின் விதிமுறைகளின்படி, பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினரின் கீழ் ஆண்டுக்கு ரூ.2 லட்சத்துக்கும் குறைவாக வருமானம் உள்ள பெற்றோரின் குழந்தைகள் இந்த ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
சமூக ரீதியாக நலிவடைந்த பிரிவினரிவின் கீழ் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், ஆதரவற்றோர், எச்.ஐ.வி. பாதிப்புள்ளவர்களின் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள், துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகள் ஆகியோர் இந்த ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம்.
மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை அறிமுக வகுப்புகளில் 25 சதவீத ஒதுக்கீட்டு இடங்களுக்கும் அதிகமாக இருந்தால் ரேண்டம் முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

No comments:

Post a Comment