Wednesday, 4 June 2014

பிளஸ் 2 விடைத்தாள் நகலை இன்று பதிவிறக்கம் செய்யலாம்

பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் தங்களுடைய விடைத்தாள் நகலை புதன்கிழமை (ஜூன் 4) காலை 10 மணி முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் அறிவித்துள்ளார்.
மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க ஜூன் 9-ஆம் தேதி வரை (5 நாள்கள்) கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ஆம் தேதி வெளியிடப்பட்டன. விடைத்தாள் நகல் கோரி 79,953 மாணவர்களும், மறுகூட்டல் கோரி 3,346 மாணவர்களும் விண்ணப்பித்தனர்.
இதில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களுக்கான விடைத்தாள் நகல்களை கோரி மட்டும் 90 சதவீதம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர உள்ள மாணவர்களுக்கு கூடுதலாக மதிப்பெண் பெற வாய்ப்பிருந்தால் நல்ல கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்பதால் விடைத்தாள் நகலை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
விடைத்தாள் நகல்கள் பதிவிறக்கம் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு விடைத்தாள் நகல்களைக் கோரியுள்ள மாணவர்கள் student.hse14rtrv.in என்ற இணையதளத்தில் தங்களது பதிவு எண் மற்றும் விண்ணப்ப எண்ணைப் பதிவு செய்து விடைத்தாள் நகலினைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விடைத்தாள் நகலினைப் பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதளத்தில் Application for Retotalling Revaluation என்ற தலைப்பினை கிளிக் செய்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
இந்த விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்திசெய்து 2 நகல்கள் எடுத்து ஜூன் 9-ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்குள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கான கட்டணத்தை முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும் என அவர் அறிவித்துள்ளார்.
மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக் கட்டணம் எவ்வளவு?
மறுகூட்டலுக்கு மொழிப்பாடங்கள், ஆங்கிலம், உயிரியல் பாடங்களுக்கு தலா ரூ.305-ம், ஏனைய பாடங்களுக்கு தலா ரூ.205-ம் கட்டணமாக செலுத்த வேண்டும். மறுமதிப்பீட்டுக்கு மொழிப்பாடங்கள், ஆங்கிலப் பாடத்துக்கு தலா ரூ.1,010-ம், ஏனைய பாடங்களுக்கு தலா ரூ.505-ம் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
ஏற்கெனவே மறுகூட்டல் கோரியுள்ளவர்களின் முடிவுகள், புதிதாக மறுகூட்டல் கோருபவர்களின் முடிவுகள் ஆகியவை மறுமதிப்பீட்டு முடிவுகளுடன் சேர்த்து அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் முன் கவனம் தேவை:
மறுமதிப்பீட்டின்போது மதிப்பெண் குறையவும் வாய்ப்பிருப்பதால் மாணவர்கள் தங்களது பாட ஆசிரியர்களுடன் ஆலோசித்த பிறகே மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
விடைத்தாள் மறுமதிப்பீட்டில் மொத்த விடைத்தாளையும் மூன்று மூத்த ஆசிரியர்கள் கொண்ட குழு மறுமதிப்பீடு செய்யும். இந்தக் குழுவுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட மதிப்பெண்ணை குறைக்கவோ, அதிகரித்து வழங்கவோ அதிகாரம் உண்டு.
எனவே, ஏதேனும் ஒரு கேள்விக்கு மதிப்பெண் அதிகரிப்பதை மட்டும் மனதில் வைத்து மறுமதிப்பீடு கோரக் கூடாது. மற்ற கேள்விகளுக்கான விடைகள் அனைத்தும் சரியாக உள்ளனவா, அவற்றுக்கான மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும். மதிப்பெண் அதிகரிக்க வாய்ப்பிருந்தால் மட்டுமே மறுமதிப்பீடு கோர வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.
மறுமதிப்பீட்டில் மதிப்பெண்ணில் மாறுதல் இருக்கும் மாணவர்களுக்கு புதிதாக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும். மறுகூட்டலின்போது மதிப்பெண் அதிகரித்தால் மட்டுமே புதிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். மதிப்பெண் குறைந்தால், அவர்களுக்கு பழைய மதிப்பெண்ணே வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஏற்கெனவே அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment