ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகளில் விளக்கம் கோரி நோட்டீஸ் அளிக்கப்பட்டதால் ஆசிரியர்கள் கலக்கமடைந்துள்ளனர் .
கடந்த கல்வி ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 10 அரசு பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சியடைந்தன. எஞ்சிய அரசு பள்ளிகளில் 80 சதவீதம் தேர்ச்சி குறைந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 17 ஏ, ஆசிரியர்களுக்கு 17 பி நோட்டீஸ் முதன்மை கல்வி அலுவலரால் வழங்கப்பட்டது.
மேலும், இப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் நடப்பு கல்வி ஆண்டிற்கான கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் முதன்மை கல்வி அலுவலரை சந்தித்து முறையிட்டனர். பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவுரைபடி கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது. ஆனால், ஆசிரியர்களுக்கு வழங்கிய நோட்டீஸ் விலக்கி கொள்ளப்படவில்லை.
இது குறித்து முதுகலை, பட்டதாரி ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், "ஏராளமான பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளது. திருவாடானை அரசு மேல்நிலைப் பள்ளியில் வணிகவியல், பாண்டுகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கிலம், கணித பாடங்களுக்கு நான்காண்டுகளாக ஆசிரியர்கள் இல்லை.
மங்கள்குடி பள்ளியில் தமிழ், ஆங்கிலம், கணிதப் பாடங்களுக்கு ஆசிரியர் இல்லாத நிலை நீடிப்பதால் அரசு தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி எட்டுவது கடினம். கல்வித்துறை நடவடிக்கையால் ஆசிரியர்களே இல்லாத பள்ளிகளின் கல்வித்தரம் மேலும் பாதிக்கப்படும்" என்றனர்.
No comments:
Post a Comment