Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Saturday, 14 June 2014

மாத சம்பளக்காரர்களுக்கு இனிப்பு செய்தி... வருமான வரி உச்சவரம்பு ரூ 3 லட்சமாக உயர்கிறது!


வருமான வரி விலக்கு பெறுவதற்கான வரம்பை தற்போதுள்ள ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்த நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், மத்திய பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினருக்கு நல்ல செய்தி வெளியாகும் என எதிர்பார்க்கலாம். மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு அமைந்துள்ளது. இந்த அரசின் முதல் பட்ஜெட் அடுத்த மாதம் 11ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. பட்ஜெட் தயாரிப்பு தொடர்பாக பல்வேறு தரப்பினருடன் நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆலோசனை நடத்தி வருகிறார். முதல் பட்ஜெட் என்பதால், மக்களிடம் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. நடுத்தர வர்க்கத்தினர் குறிப்பாக அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் சம்பளதாரர்கள் வருமான வரி விலக்கு பெறுவதற்கான வரம்பு உயர்த்தப்படும் என எதிர்பார்க்கின்றனர்.

தற்போது, ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு அதிகமாக உள்ளவர்களிடம் வருமான வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சம் வரையான வருமானத்திற்கு 10 சதவீத வரியும், ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சம் வரையான வருமானத்திற்கு 20 சதவீத வரியும், ரூ.10 லட்சத்துக்கு அதிகமாக வருமானம் உள்ளவர்களிடம் 30 சதவீதம் வரியும் வசூலிக்கப்படுகிறது. வருமான வரி விலக்கு வரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டும் என நிதி தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு கடந்த 2010ம் ஆண்டு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. ஆனால், இதனை அப்போதைய மத்திய அரசு ஏற்கவில்லை. 
இந்நிலையில், மத்தியில் அமைந்துள்ள புதிய பாஜ அரசு, முதல் பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு வரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்த முடிவு செய்திருப்பதாக நிதித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. வருமான வரி வரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்துவதால் அதிகம் பலன் அடைய போவது மாத சம்பளம் பெறுபவர்கள்தான். 

இதனால், இவர்களின் பொருட்கள் வாங்கும் சக்தி அதிகரிக்கும். இதன் மூலம் சந்தையில் பணப்புழக்கம் அதிகரித்து பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் கிடைக்கும் என்பதால், வருமான வரி விலக்கை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதே போல் வீட்டுக்கடன், மெடிக்கல் இன்சூரன்ஸ் போன்றவற்றிற்கு அளிக்கப்படும் வருமானவரி சலுகைகளையும் அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும், நேரடி வரி விதிப்பு வரைவுச் சட்டத்தில், ஆண்டுக்கு ரூ.10 கோடிக்கு அதிகமாக வருமானம் கொண்ட பெரும் பணக்காரர்களுக்கு 35 சதவீத வரி விதிக்க பரிந்துரைக்கப்பட்டது. இதையும் நிதியமைச்சகம் பரிசீலித்து வருவதாக தெரிகிறது.

No comments:

Post a Comment