கோடை விடுமுறைக்கு பிறகு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல் நாளே ரூ.780 கோடி மதிப்பிலான புத்தகம், சீருடை, நோட்டுகள் வழங்கப்பட்டன.அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு கடந்த மே மாதம் 1ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவ மாணவியர் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வந்தனர். அரசுப் பள்ளிகளில் நேற்று புதிய மாணவர்கள் சேர்க்கை நடந்தது.ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா நலத்திட்ட பொருட்கள் வழங்கப்படுவது உண்டு. இந்த ஆண்டும் 13 வகையான இலவச நலத்திட்டங்கள் வழங்கப்பட உள்ளன. பள்ளி திறக்கப்பட்ட நேற்று 1 முதல் பிளஸ் 2 வகுப்புவரை படிக்கும் 1 கோடியே 11 லட்சம் மாணவ மாணவியருக்கு ரூ.264 கோடியே 35 லட்சம் மதிப்பில் இலவச பாடப்புத்தகங்கள், 1 முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் 77 லட்சத்து 66 ஆயிரம் மாணவ மாணவியருக்கு ரூ.106 கோடியே 45 லட்சம் மதிப்பு நோட்டுப்புத்தகம், 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் 46 லட்சத்து 29 ஆயிரம் மாணவ மாணவியருக்கு ரூ.409 கோடியே 30 லட்சம் மதிப்பில் இலவச சீருடைகள் வழங்கப்பட்டன.
இதையடுத்து, பிளஸ் 1 படிக்கும் 6 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு ரூ.216 கோடியே 4 லட்சம் மதிப்பில் சைக்கிள் வழங்கப்பட உள்ளன. அதேபோல பிளஸ் 2 மாணவர்கள் 5 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு ரூ.898 கோடி மதிப்பில் லேப்டாப்கள் வழங்கப்பட உள்ளன. மேலும் ரூ.160 கோடி மதிப்பில் புத்தகப் பை, பஸ்பாஸ், கணித உபகரண பெட்டி, கிரையான் பென்சில்கள், கலர் பென்சில்கள், நிலவரைபட நூல், காலணி ஆகியவை வழங்கப்பட உள்ளன.மேலும், இந்த ஆண்டில் 1 முதல் 10ம் வகுப்புவரை படிக்கும் 48 லட்சத்து 63 ஆயிரம் பேருக்கு சத்துணவு வழங்கப்பட உள்ளது. பள்ளிகளில் சேரும் மாணவர்களின் இடைநிற்றலைதடுக்க சிறப்பு ஊக்கத் தொகையாக பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூ.353 கோடியே 56 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது.
No comments:
Post a Comment