Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Saturday, 14 June 2014

9-ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் கொச்சையான வார்த்தைகள்: மாற்றி அமைக்க பெற்றோர் கோரிக்கை


தமிழக சமச்சீர் பாடத்திட்டத்தில், 9-ம் வகுப்பு முதல் பருவ மொத்த பாடங்களும், செய்யுள், உரைநடை, இலக்கணம் 3 என இயல்களாக பிரிக்கப்பட்டுள்ளன. உரைநடை பகுதியில் அதன் துணைப்பாடமாகிய ‘மாமரம்’ என்ற தலைப்பிலான பாடத்தில், கொச்சையான(பேச்சு வழக்கு) வார்தைகள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு உள்ளன. 

குறிப்பாக ‘பழத்தெ’, ‘கெடச்சதை’, ‘நெனச்சா’, ‘பத்தி’, ‘ரொம்ப பேருகிட்ட’, ‘கதையெ’, ‘மரத்திலெ’, ‘யொன்னும் சக்தியில்லெ’, ‘இதில’, ‘எழுபத்தஞ்சு’, ‘ஊர்ல’, என 75-க்கும் மேற்பட்ட கொச்சையான வார்த்தைகள் அச்சிடப்பட்டுள்ளன. இந்த பாடப்புத்தகத்தை, தனது மகளுக்கு வாங்கி கொடுத்த சாப்ட்வேர் நிறுவன துணை திட்ட மேலாளராக பணிபுரியும் எம்.பரணிகுமார் என்பவர் மிகுந்த அதிர்ச்சி அடைந்தார். 

இது தொடர்பாக அவர் கூறும்போது, “சி.பி.எஸ்.இ. கல்வி திட்ட மாணவர்கள் பெரும்பாலும் தமிழை படிக்க முன் வருவதில்லை. தமிழ் மீது பற்று கொண்ட பெற்றோர் தங்கள் குழந்தைகள் தமிழ் படிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் தமிழை மொழிப்பாடமாக எடுத்து இருக்கும்போது, இந்த புத்தகத்தில் உள்ள தமிழை அப்படியே படித்தால் அபத்தம்தான் நேரிடும். இந்த புத்தகத்தில் உள்ள தமிழை படித்தால் மாணவர்களுக்கு தமிழ் எங்கே தெரியும்? தமிழ் எங்கே வளரும்?” என்று நொந்து கொண்டார்.

இது குறித்து மேலும் சில பெற்றோர் வருத்தத்துடன் கூறுகையில், ‘‘ஏராளமான தமிழ் அறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இன்றைய இளைய சமுதாயத்தினர் பலர் ஆங்கில மோகத்தில் மெல்ல மெல்ல கொன்று வருகின்றனர். இதுபோன்ற நிலையில், 9-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் தவறாகவோ அல்லது கவனக்குறைவாகவோ அச்சிடப்பட்டுள்ள கொச்சையான வார்த்தைகள் தமிழ் மொழியை சிதைக்கும் விதமாகவே அமைந்துள்ளது. எனவே இது போன்ற பிழைகளை திருத்தம் செய்து பாடத்தை மாற்றி அமைக்கவேண்டும்’’ என கோரிக்கை விடுத்தனர்.

No comments:

Post a Comment