அருப்புக்கோட்டை:ஒரு மாணவனுக்கு இரு ஆசிரியர் என்ற நிலையில்,அருப்புக்கோட்டை அருகே ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி ஒன்று செயல்படுகிறது.அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேலாயுதபுரம் ஊராட்சியை சேர்ந்தது ராமச்சந்திராபுரம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி 1961 ல் துவங்கப்பட்டது. துவக்க காலத்தில் 50 க்கு மேற்பட்ட மாணவர்கள் படித்த பள்ளியில், தற்போது ஒரு மாணவன் மட்டுமே, 3 வது படித்து வருகிறான். இந்த ஆண்டிலும் ஒன்றாம் வகுப்புக்க மாணவர் சேர்க்கை இல்லை. இந்த மாணவனுக்கு ஒரு தலைமை ஆசிரியர், ஒரு உதவி ஆசிரியர் உள்ளனர்.
பள்ளிக்கு புதிய கட்டடம் பேன் உட்பட அனைத்து வசதிகள் இருந்தும், மாணவர்கள் இல்லை. பந்தல்குடி மெயின் ரோட்டிலிருந்து 6 கி.மீ., தூரம் உள்ளடக்கி உள்ள இந்த கிராமத்தில், ஆண்கள் 37, பெண்கள் 29 பேர் என 66 பேர் தான் உள்ளனர். ஊரில் முக்கியமாக பஸ் வசதியும் இல்லை. மெயின் ரோட்டிலிருந்து நடந்து தான் வர வேண்டும். ரோடும் குண்டும், குழியுமாக வேறு உள்ளது. இதனால் இந்த ஊரை சேர்ந்தவர்கள் பலர் அருகில் உள்ள பந்தல்குடியில் குடியேறி விட்டனர். அங்கு தங்கள் குழந்தைகளை படிக்க வைக்கின்றனர். அடிப்படை வசதிகளான ரோடு, பஸ் வசதி போன்றவற்றை ஏற்படுத்த,உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே போல், சேதுராஜபுரம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 6 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்கள், சிதம்பராபுரத்தில் 7 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்கள்தான் உள்ளனர். உள்ளூர் மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்க, பொதுமக்களை கல்வி நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும்.
No comments:
Post a Comment