
பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுடன் மோர் வழங்க வேண்டுமென்று மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி விருப்பம் தெரிவித்திருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சராக ஸ்மிருதி இரானி பொறுப்பேற்றிருக்கிறார். கல்வித் துறையை உள்ளடக்கிய இந்த துறையின் அமைச்சர் ஸ்மிருதி, ஒரு பட்டதாரி கூட இல்லை என்று காங்கிரஸ் கடுமையாக விமர்சித்தது. மேலும், அவர் தனது கல்வித் தகுதி குறித்து வேட்புமனுக்களில் முரண்பாடான தகவல்களை கூறியிருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு ஸ்மிருதி பதிலளிக்கையில், எனது பணியை பார்த்து விட்டு அதன் பிறகு விமர்சியுங்கள் என்று கூறினார்.
இந்த நிலையில், அமைச்சர் ஸ்மிருதி, பள்ளி கல்வித் துறையில் கொண்டு வர வேண்டிய மாற்றங்கள் குறித்து அதிகாரிகளிடம் விவாதித்திருக்கிறார்.
அப்போது அவர் மூன்று ஐடியாக்களை கூறியிருக்கிறார். அதன்படி, டெல்லியில் உள்ள பள்ளிகளில் செயல்படுத்தப்படும் மதிய உணவு திட்டம் பற்றி கேட்டறிந்தார். நாடு முழுவதும் 12.65 லட்சம் பள்ளிகளில் சுமார் 12 கோடி மாணவர்கள் மதிய உணவு சாப்பிடுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது அவர், பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுடன் மோர் வழங்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு ரத்தசோகை உள்ளிட்ட நோய்கள் வராமல் தடுக்க முடியும் என அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கிறார். மோர் வழங்குவதற்கான செலவு விவரங்களை கணக்கிடவும் உத்தரவிட்டிருக்கிறார்.
தற்போது, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் மதிய உணவுடன் மாணவர்களுக்கு பால், இரும்புச் சத்து மாத்திரைகள் வழங்கப்படுவதாக அதிகாரிகள் பதிலளித்தனர். அதே போல், அதிக திறமை படைத்த அறிவார்ந்த மாணவர்களுக்காக தனி பள்ளிகள் துவங்குவது பற்றியும், பள்ளிகளில் சனிக்கிழமை விளையாட்டு தினமாக பின்பற்றுவது குறித்தும் அதிகாரிகளிடம் அவர் ஆலோசித்தார்.
No comments:
Post a Comment