உடுமலையில் உள்ள அரசுப்பள்ளிகளின் தரம் மற்றும் தேர்ச்சி சதவீதம் கடந்தாண்டைவிட, இந்தாண்டு அதிகரிக்கும் வகையில், கல்வித்துறை மற்றும் பள்ளிகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் 136 அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், ஆண்டுதோறும் பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். 2014-15 கல்வியாண்டு நேற்று துவங்கியது. கடந்த கல்வியாண்டில் மேற்கொள்ளப்பட்ட முப்பருவ கல்விமுறையே இந்த ஆண்டும் செயல்பட உள்ளது. பள்ளியில் ஆரம்ப வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு புத்தகப்பை, காலணிகள், பிற வகுப்புகளுக்கு எழுது பொருட்கள், சத்துணவு மாணவர்களுக்கு சீருடைகள், அனைத்து மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்தும், மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும், கல்வியாண்டு துவங்கும் முன்னரே பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகள் துாய்மையாக இருக்க வேண்டும் என்ற கல்வித்துறையின் அறிவிப்புப்படி, பள்ளிகள் துாய்மைபடுத்தப்பட்டு தயாராக உள்ளன. அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்ட போதிலும், மாணவர்களின் கல்வித்தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டால் மட்டுமே இவை அனைத்தும் பயனுள்ளதாக இருக்கும் என பெற்றோர்கள் தெரிவித்தனர்.
உடுமலை கல்வியாளர்கள் கூறியதாவது: அரசுப்பள்ளி மாணவர்களை மாநில மற்றும் மாவட்ட அளவில் மதிப்பெண் எடுக்க வைத்தல், பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரித்தல், மாணவர்களுக்கு பள்ளியில் அடிப்டை வசதிகளை பூர்த்தி செய்து கொடுத்தல் உள்ளிட்டவற்றை நடப்பு கல்வியாண்டில் செயல்படுத்த பள்ளிகள் முழு முயற்சியில் ஈடுபட வேண்டும். அரசு பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் உயர பள்ளிகள் மட்டுமின்றி, கல்வித்துறையும் உதவ வேண்டும். மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட பள்ளிகளில் இல்லாதது, மாணவர்களின் விளையாட்டு திறமைகளை மேம்படுத்த மைதான வசதியில்லாதது, சுகாதாரமற்ற கழிப்பறை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு நடவடிக்கை எடுக்காமல் கல்வித்துறை அலட்சியமாக உள்ளது. மாணவர்களின் தேவையை பூர்த்தி செய்தால் மட்டுமே, அரசு பள்ளியில் பயில மாணவ, மாணவியர் முன்வருவர்; கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment