Monday, 2 June 2014

இன்று பள்ளி திறப்பு: குழந்தைகளுடன் விடுமுறைக்கு சென்றவர்கள் சென்னை திரும்ப முடியாமல் தவிப்பு


அரசு பஸ்கள் போதிய அளவு இயக்கப்படாததால், கோடை விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்ப முடியாமல் பொது மக்கள் பல மணி நேரம் காத்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஏப்ரல் 31ம் தேதி பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. இதனால், சென்னையில் இருந்து பலர் சொந்த கிராமங்களுக்கு சென்றனர். தற்போது, கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதனால் கோடை விடுமுறையில் வெளியூர்களுக்கு சென்றவர்கள், கடந்த இரண்டு நாட்களாக சென்னைக்கு திரும்ப தொடங்கி உள்ளனர். இதற்காக தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு 500 சிறப்பு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது.

இது மிகவும் குறைந்த எண்ணிக்கை என்பதால், பயணிகள் திருநெல்வேலி, நெல்லை, மதுரை, தென்காசி, தேனி, கோவை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பஸ்கள் கிடைக்காமல் பல மணி நேரம் காத்து கிடந்தனர்.இதையடுத்து, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இயக்கப்படும் விழுப்புரம் கோட்ட பஸ்கள் பிற மாவட்டங்களுக்கு திருப்பி விடப்பட்டது. அந்த பஸ்கள் நேற்று முன்தினம் இரவு மீண்டும் சென்னைக்கே திரும்பின. தென் மாவட்டங்களுக்கு கூடுதலாக அந்த பஸ்கள் மீண்டும் இயக்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் நின்றபடியும், படிக் கட்டில் உட்கார்ந்த படியும் சென்னைக்கு திரும்பி வரும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி, சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டிவனம், வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து குறைந்த எண்ணிக்கையிலேயே சென்னைக்கு பஸ்கள் இயக்கப்பட்டது. 

இதனால் நேற்று அதிகாலை முதல் பொது மக்கள் பஸ்சுக்காக கூட்டம் கூட்டமாக பேருந்து நிலையத்திலேயே காத்திருந்தனர். இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில்: பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் 2ம் தேதி பள்ளி திறக்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு 500க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. அதேபோன்று தென் மாவட்டங்களுக்கு சென்னையில் இருந்து 300க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது என்றனர்.இவ்வளவு பஸ்கள் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டபோதும் பொதுமக்கள் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு திரும்பி வர போதுமானதாக இல்லை என்கின்றனர்.

No comments:

Post a Comment