விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில், என்.ஜி.ஓ., மூலம் நடத்தப்பட்டு வந்த, சர்வ சேவா தொடக்கப்பள்ளிகள், நிதி பற்றாக்குறையால் மூடப்பட்டன. கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக, உறுதி கூறியதை அடுத்து, பெற்றோர்கள் நிம்மதி அடைந்தனர்.
காரியாபட்டியை மையமாக கொண்டு செயல்பட்டு வந்த என்.ஜி.ஓ., அமைப்பான சர்வ சேவா நிறுவனம், மிகவும் பின் தங்கிய கிராமங்களான பெரிய புளியம்பட்டி, கல்யாணி புரம், பச்சேரி, கல்லாம் பிரம்பு, தொடுவன் பட்டி, விட்டிலாரேந்தல், திருவிருந்தாள்புரம், கரிசல்குளம் ஆகிய கிராமங்களில், அரசு உதவி பெறாமல், சொந்த செலவில் தொடக்கப் பள்ளிகளை துவக்கி, ஏராளமான மாணவ, மாணவிகளுக்கு, இலவசமாக கல்வி கற்றுக் கொடுத்தது. சத்துணவு வழங்குவதற்கு மட்டும் அரசிடம் உதவி பெறப்பட்டது. கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த சர்வ சேவா நிறுவனம், சில ஆண்டுகளாக நிதி பற்றாக்குறையால், பள்ளிகளை நடத்த முடியாமல் தத்தளித்தது. இந்நிலையில், இந்த கல்வி ஆண்டு முதல், அனைத்து பள்ளிகளையும் மூடிவிட, இந்நிறுவனம் முடிவு செய்தது. ஏற்கனவே, இந்நிறுவனத்தின் கீழ் இயங்கி வந்த பள்ளிகளை, அரசு ஏற்று நடத்த, 2 ஆண்டுகளுக்கு முன்பே அறிக்கை சமர்பிக்கப்பட்டது. பள்ளிகளை அரசிடம் ஒப்படைப்பதில் உள்ள சிக்கல் காரணமாக, அரசு ஏற்காமல் காலம் கடத்தி வந்தது. ஆனால், பெற்றோர்களுக்கு, பள்ளிகளை மூடுவது குறித்து, தகவல் எதுவும் கொடுக்கவில்லை.
இந்நிலையில், பெரியபுளியம்பட்டியில் கோடை விடுமுறை முடிந்து, நேற்று, மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர். நீண்ட நேரமாகியும் பள்ளி கதவுகள் திறக்கப்படாததால், அங்கு திரண்டு வந்த பெற்றோர்கள், அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். மாவட்ட கல்வி அதிகாரி டென்னிஷ், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் கலைச்செல்வன் பள்ளி வந்தனர். அவர்கள், 'அருகில் உள்ள வேறு பள்ளிக்கு மாணவர்களை அனுப்புங்கள்; அடுத்த ஆண்டு அரசு சார்பில் பள்ளி துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர். இதற்கு, எதிர்ப்பு தெரிவித்த கிராமத்தினர், 'வேறு எங்கும் எங்கள் பிள்ளைகளை அனுப்ப மாட்டோம். வாகன போக்குவரத்து அதிகமாக இருப்பதால், எங்கள் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு கிடையாது. இங்கேயே பள்ளி துவங்க வேண்டும்'என, வலியுறுத்தினர். இதையடுத்து, சர்வ சேவா நிறுவனத்தினரிடம் பேசி, அங்கேயே பள்ளி தொடர்ந்து இயங்க அனுமதி பெற்றனர். அருகில் உள்ள பள்ளியிலிருந்து ஆசிரியை வரவழைக்கப்பட்டு, தொடர்ந்து பாடங்கள் நடத்தப்படும், கூடுதல் ஆசிரியரும் நியமிக்கப்படுவார் ' என, அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து, கிராமத்தினர் கலைந்து சென்றனர். ஆனால், மற்ற ஊர்களில் உள்ள இந்நிறுவன பள்ளிகள் திறக்கப்படாததால், அவற்றில் பயிலும் மாணவர்கள் தவிக்கின்றனர். அவர்களது எதிர்காலம் கருதி, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment