Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Saturday, 7 June 2014

மாணவியரின் தற்கொலை எண்ணம் தடுக்க 'மொபைல் வேன் கவுன்சிலிங்': பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு


பொதுத்தேர்வுகளில் தோல்வியடைந்த மாணவியர் பலர், தற்கொலை செய்து கொண்டதால் அதிர்ச்சியடைந்துள்ள கல்வித்துறை, 'மொபைல் வேன் கவுன்சிலிங்' திட்டத்தை முழுமையாகப்பயன்படுத்த பள்ளிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசு, உதவி பெறும் மற்றும் ஊராட்சி ஒன்றியப்பள்ளி மாணவ, மாணவியர் மத்தியில் ஒழுக்கம், தன்னம்பிக்கை உட்பட பண்புகளை வளர்க்க, புத்தகப்படிப்பை தவிர்த்து, வெளியுலக வாழ்க்கை குறித்த வாழ்க்கைக்கல்வியை போதிக்க, பள்ளி கல்வித்துறை முனைப்பு காட்டி வருகிறது. அதன்படி, பள்ளிகள் தோறும், மாணவ, மாணவியருக்கு வாழ்க்கைக்கல்வி போதிக்கப்படுகிறது. இந்நிலையில், பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில், தோல்வியடையும் மாணவ, மாணவியர், தற்கொலை செய்து கொள்ளும் நிலை, பல இடங்களில் காணப்படுகிறது. குறிப்பாக, மாணவியர், இத்தகைய செயல்களில் அதிகம் ஈடுபடுகின்றனர். தோல்வியால் துவண்டு விடக்கூடாது என்ற நோக்கில் தான், மாநில அரசு உடனடித்தேர்வுகளை நடத்தும் திட்டத்தை கொண்டு வந்தது. இருப்பினும், நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், தோல்வியடைந்த மாணவியர் பலர், தற்கொலை செய்து கொண்டனர்; பலர் தற்கொலைக்கு முயற்சி செய்து, மருத்துவ சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தனர். இச்சம்பவம் கல்வித்துறை வட்டாரங்களை அதிர்ச்சியடையச் செய்தது. உண்மையிலேயே தேர்வில் தோல்வியடைந்தது தான், மாணவியரின் தற்கொலைக்கு காரணமா அல்லது காதல் விவகாரம், குடும்பப்பிரச்னை என, வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற கோணத்தில், கல்வித் துறை அதிகாரிகள் விரிவான ஆய்வு நடத்தி, அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் உளவியல் ரீதியான கவுன்சிலிங்கை, நடப்பாண்டின் துவக்கத்தில் இருந்தே வழங்க வேண்டும் என, அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

தவிர, பள்ளிகள் தோறும் சென்று உளவியல் நிபுணர் மூலம் கவுன்சிலிங் வழங்க, நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு ஒரு வேன் என, மாநிலம் முழுக்க 10 மொபைல் வேன்களை அரசு வழங்கியுள்ளது; அதில், பணியமர்த்தப்பட்டுள்ள உளவியல் நிபுணர், பள்ளிகள் தோறும் சென்று, மாணவ, மாணவியருக்கு உளவியல் ரீதியான கவுன்சிலிங்கை வழங்கி, அவர்களின் தன்னம்பிக்கையை அதிகப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறார். இந்த 'மொபைல் வேன்' சேவையை பள்ளி நிர்வாகங்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும், அந்தந்த மாவட்டக்கல்வி அதிகாரிகள் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment