Saturday, 7 June 2014

தமிழ் மொழி பாடத்தை கட்டாயமாக்கும் முடிவு: எதிர்த்த வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு


தமிழ் மொழி பாடத்தை, 10ம் வகுப்புக்கு கட்டாயமாக்க, மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் இயக்குனர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, விசாரணையை, வரும், 10ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

தமிழ் கற்றல்:

தமிழகம் மற்றும் புதுச்சேரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி நிர்வாக சங்கத்தின், பொது செயலர் வெங்கடாசல பாண்டியன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: கடந்த, 2006ல், 'தமிழ் கற்றல்' சட்டத்தை, தமிழக அரசு நிறைவேற்றியது. இதற்கு, கவர்னரின் ஒப்புதல் பெறப்பட்டு, கெஜட்டில் வெளியிடப்பட்டது. தமிழை, மொழிப்பாடமாக மாணவர்களுக்கு கற்பிப்பது தான், சட்டத்தின் நோக்கம். தமிழ் கற்றல் சட்டத்தை, 10ம் வகுப்புக்கு, 2015 - -16ல் அமல்படுத்த போவதாக, மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் இயக்குனர், கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டுள்ளார். பெரும்பாலான பள்ளிகள், தமிழை மொழிப்பாடமாக கற்பிக்கவில்லை. இந்த சட்டத்தை அமல்படுத்தினால், தமிழ் படிக்காத மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அளித்த உத்தரவில், 'தாய்மொழியை கற்பிக்க வேண்டும் என திணிப்பது, கல்வி நிறுவனங்களின் அடிப்படை உரிமைகளில் பாதிப்பு ஏற்படுத்துவது போலாகும்' என, தெரிவித்துள்ளது.

உத்தரவுக்கு தடை:

தமிழ் கற்றல் சட்டம், அரசியல் அமைப்பு சட்டத்தை மீறுவதாக உள்ளது. இச்சட்டத்தை அமல்படுத்தும் விதமாக, மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் இயக்குனர் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்; ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு, நீதிபதி ராஜேந்திரன் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.சந்திரன், வழக்கறிஞர்கள் ஆர்.கண்ணன், எம்.அருண்குமார் ஆகியோர் ஆஜராகினர். மனுவை பரிசீலித்த, நீதிபதி ராஜேந்திரன், அதன் மீதான விசாரணையை வரும், 10ம் தேதிக்கு தள்ளி வைத்தார். அரசு தரப்பில் பதில் அளிக்க, கூடுதல் அரசு பிளீடர் சீனிவாசன், 'நோட்டீஸ்' பெற்றுக் கொண்டார்.

No comments:

Post a Comment