Tuesday, 3 June 2014

பி.எட். வினாத்தாள் அவுட் ஆகவில்லை: துணைவேந்தர் மறுப்பு


தமிழகம் முழுவதும் பி.எட்., மற்றும் எம்.எட். தேர்வுகள் தற்போது 102 மையங்களில் நடைபெற்று வருகின்றன. தேர்வுகளில் முறைகேடு நடைபெறாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம் வகுத்துள்ளது.

பறக்கும் படை அமைத்து ரகசியமாகவும் கண்காணிக்கிறார்கள். கடந்த மாதம் 30–ந் தேதி தொடங்கி நடைபெற்று வரும் இந்த தேர்வை துணைவேந்தர் விஸ்வநாதன் சாதாரண உடையில் ரகசியமாக சென்று சோதனை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று பி.எட். உளவியல் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கான வினாத்தாள் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) வெளியானதாக தகவல் பரவியது. சேலம் அரசு கலைக்கல்லூரியில் தேர்வு எழுதிய மாணவ–மாணவிகள் இந்த தகவலை பரப்பி உள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை வெளிவந்த வினாத்தாள் தான் நேற்றைய தேர்வில் கேட்கப்பட்டு இருப்பதாக அந்த செய்தி காட்டுத்தீ போல் பரவியது. இந்த தகவலை அங்குள்ள ஒரு தனியார் கல்லூரி மாணவர்கள் பரப்பி விட்டதாகவும் கூறப்படுகிறது. ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கான வினாத்தாள் உண்மையிலே அவுட் ஆனதா? என்பது குறித்து கல்வியியல் பல்கலைக் கழக துணை வேந்தர் விஸ்வநாதனிடம் கேட்கப்பட்டது. அதை அவர் மறுத்து கூறியதாவது:–

சேலத்தில் பி.எட். வினாத்தாள் வெளியானதாக வந்த தகவல் முற்றிலும் வதந்தி. அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. வினாத்தாள் அச்சிடும் அச்சகத்தில் இருந்து நேரிடையாக தேர்வு நடைபெறும் மையங்களுக்கு வினாத்தாள் கொண்டு செல்லப்படும். அங்கு பல்கலைக்கழகத்தை சேர்ந்த 2 பிரதிநிதிகள், கல்லூரி முதல்வர், தலைமை கண்காணிப்பாளர் முன்னிலையில் வினாத்தாள் ‘சீல்’ பிரிக்கப்பட்டு வெளியே எடுக்கப்படும். இதில் தவறு நடக்க 100 சதவீதம் வாய்ப்பு இல்லை.

தேர்வுக்கு முன்பாக முக்கியமான சில கேள்விகளை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கூறுவது வழக்கம். அது போன்று கூறிய சில வினாக்கள் நேற்றைய உளவியல் தேர்வில் வந்துள்ளது. அதை யாரோ தவறாக வினாத்தாள் அவுட் ஆகி விட்டதாக பரப்பி விட்டுள்ளனர். தேர்வில் எந்த முறைகேடுக்கும் இடமளிக்காத வகையில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.

இந்த தவறான தகவல் குறித்து முழுமையாக விசாரிக்கப்பட்டது. இதை மாணவர்கள், பெற்றோர்கள் நம்ப வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment