Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday, 20 June 2014

கும்பகோணம் தீ விபத்து: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு


கும்பகோணம் தீ விபத்து தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது.

கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா தொடக்கப் பள்ளி மற்றும் சரஸ்வதி தொடக்கப் பள்ளியில் கடந்த 2004-ஆம் ஆண்டு ஜூலை மாதம் தீ விபத்து நடந்தது. அதில், 94 குழந்தைகள் இறந்தன. 18குழந்தைகள் பலத்த தீக்காயம் அடைந்தன.

அதிகாரிகளின் கவனக் குறைவால்தான் இந்த விபத்து நடந்தது என்பதால் அதிக இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என இறந்த குழந்தைகளின் பெற்றோர் கடந்த 2012-ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி இறந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக நீதிபதி பி.சண்முகம் தலைமையில் ஒரு நபர் குழுவை அமைக்க உத்தரவிட்டார். அந்தக் குழு ஆறு மாதங்களுக்குள் இழப்பீடு வழங்குவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தனி நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் நீதிபதி பி.சண்முகம் தலைமையில் ஒரு நபர் குழு அமைத்தது சரிதான். இந்த உத்தரவின் நகல் கிடைத்த நாள் முதல், நான்கு மாதங்களுக்குள் ஒரு நபர் குழு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

மேலும், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை இரண்டு வாரங்களுக்குள் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிட்டனர்.

ஆனால், உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இரண்டு வாரங்களுக்குள் தமிழக அரசு நிறைவேற்றவில்லை. எனவே, தமிழக அரசின் தலைமைச் செயலர் மோகன் வர்கீஸ் சுங்கத் மற்றும் பள்ளிக் கல்வித் துறை செயலர் சபிதா ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கும்பகோணம் தீ விபத்தில் பலியான குழந்தைகளின் பெற்றோர் சார்பில் கே.இன்பராஜ் உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதிகள் என்.பால் வசந்தகுமார், எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை (ஜூன்19) வந்தது. அப்போது, பள்ளி கல்வித் துறைச் செயலர் டி.சபிதா தரப்பில் விளக்க மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், புதிய குழு அமைக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை 3 வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment