சேலம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக இருந்தவர் ஈஸ்வரன். கடந்த 2½ ஆண்டுகளாக இங்கு பணியாற்றி வந்த அவர் இந்த மாத இறுதியில் ஓய்வு பெறுவதாக இருந்தது. இந்த நிலையில் நேற்று அவர் திடீரென சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் கலந்தாய்வில் இருந்த அவரிடம் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அங்கிருந்து சோகத்துடன் வெளியேறினார்.
இதையடுத்து அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலர் உஷாவிடம் ஈஸ்வரன் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளதாகவும், இதனால் அவரது பதவியை நீங்கள் உடனடியாக ஏற்று கொள்ளுமாறு அவருக்கு சென்னை பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
இதற்கான உத்தரவு நகலும் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக உஷா உடனடியாக பொறுப்பேற்று கொண்டார்.
ஓய்வு பெற 10 நாட்கள் இருக்கும் நிலையில் திடீரென ஈஸ்வரன் சஸ்பெண்டு செய்யப்பட்ட சம்பவம் கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் ஈஸ்வரன் சஸ்பெண்டுக்கான காரணம் என்ன? என்றும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதுப்பற்றிய விபரம் வருமாறு:–
பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட பெற்றோர் ஆசிரியர் கழகத்துக்கு ஆண்டுதோறும் நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த நிதியின் மூலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் கலை, இலக்கிய விழாக்கள் நடத்தவும், தேர்வுகளுக்கான செலவினங்கள் செய்யவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பிரித்து அளிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் சேலம் மாவட்டத்தில் கடந்த 2012–ம் ஆண்டு முதல் பள்ளிகளில் நடத்தப்பட்ட கலை இலக்கிய விழாக்களுக்கு மாவட்ட பெற்றோர் ஆசிரியர் கழக நிதி உரிய வகையில் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்ததாக தெரிகிறது.
இந்த சூழ்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடைபெற்ற கலை இலக்கிய விழாவுக்காக மாவட்ட பெற்றோர் ஆசிரியர் கழக நிதி கோரி விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் அந்த பள்ளிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று தெரிகிறது.
அப்படி இருக்கும் போது சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நிதி ஒதுக்கப்பட்டதாக முறைகேடாக கணக்கில் காட்டப்பட்டு இருந்தது அந்த பள்ளி நிர்வாகத்துக்கு தெரியவந்தது. இதையடுத்து பள்ளி நிர்வாகம் சார்பில் பள்ளி கல்வித்துறை செயலர் சபீதாவுக்கு புகார் அனுப்பப்பட்டது. பள்ளி கல்வித்துறை இயக்குனர் உஷாராணி தலைமையில் குழு அமைக்கப்பட்டு இந்த புகார் மீது கடந்த 2 மாதங்களாக விசாரணை நடந்து வந்தது.
இதில் சேலம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஈஸ்வரன், மாவட்ட பெற்றோர்–ஆசிரியர் கழக நிதியை பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்யாமலேயே ஒதுக்கீடு செய்ததாக கணக்கில் காட்டி பல லட்சம் ரூபாய் கையாடல் செய்தது உறுதியானது.
இதையடுத்தே ஈஸ்வரனை தமிழக அரசு சஸ்பெண்டு செய்து அதிரடி நடவடிக்கை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment