Wednesday, 16 July 2014

மாணவர்கள் இல்லாததால் மூடுவிழா கண்ட அரசுப்பள்ளி


மாணவர்களே இல்லாததால் தேனி மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஆண்டிபட்டி ஒன்றியம் தென்பழனியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி 2003ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
ஒன்று முதல் ஐந்து வகுப்புகள் வரை கடந்த ஆண்டு வரை 10க்கும் குறைவான மாணவர்களே பயின்று வந்தனர். ஒரு தலைமை ஆசிரியர், ஒரு உதவி ஆசிரியர் பணியில் இருந்தனர். இக்கிராமத்தில் குடியிருப்புகள் குறைவாகவே உள்ளன. கடந்த ஆண்டில் படித்த மாணவர்களும் வெளியூர் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இதனால் இந்த ஆண்டு மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வரவில்லை. இதனால் பள்ளியை தற்காலிகமாக மூடுவதற்கு கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஆண்டிபட்டி உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சம்பூர்ணபிரியா கூறியதாவது: மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வர ஆசிரியர்கள் முயற்சி மேற்கொண்டும் முடியவில்லை. இதனால் உதவி ஆசிரியர் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளார். இப்பகுதி பொதுமக்களுடன் கலந்து பேசி, பள்ளியை தற்காலிகமாக மூடுவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் மாணவர்கள் சேர்ந்து படிக்க விரும்பும் பட்சத்தில் பள்ளியை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார்.

No comments:

Post a Comment