Wednesday, 16 July 2014

தாமதமாகும் அரசு பள்ளிகள் தரம் உயர்வு அறிவிப்பு: கல்வி மானியக் கோரிக்கையில் எதிர்பார்ப்பு


தமிழகத்தில் 2014-15 கல்வியாண்டிற்கான அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் தரம் உயர்வு அறிவிப்பு மற்றும் பள்ளிகள் பெயர் விவரப் பட்டியல், நாளை (ஜூலை 17) நடக்கும் பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கையில் வெளியாகுமா' என்று ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் அல்லது ஜூலை முதல் வாரத்தில் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலை பள்ளிகள் மற்றும் மேல்நிலை பள்ளிகள் விவரம் அறிவிக்கப்படும். ஆனால், நடப்பு கல்வியாண்டிற்கான தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் அறிவிப்பு மற்றும் பெயர் பட்டியல் விவரம் இதுவரை வெளியாகவில்லை. அதேபோல், அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்கு உட்பட்ட நடுநிலை பள்ளிகள் கடந்தாண்டு நிதித் தட்டுப்பாடு காரணமாக 50 பள்ளிகள் மட்டுமே தரம் உயர்த்தப்பட்டன. 2ம் கட்டமாக தரம் உயர்த்தப்படவில்லை. 'கல்வி கட்டமைப்பு' (எஜூகேஷனல் பிரமிடு) விதிப்படி, ஒவ்வொரு ஆண்டும் மேல்நிலை பள்ளிகளை விட, உயர்நிலை பள்ளிகள் தான் அதிக எண்ணிக்கையில் தரம் உயர்த்தப்பட வேண்டும். ஆனால், கடந்தாண்டின் நிலை கல்வி கட்டமைப்பை கேள்விக் குறியாக்கும் வகையில் உள்ளது. எனவே, இந்தாண்டில் பள்ளிகள் தரம் உயர்த்துதல் விஷயத்தில் அரசு முக்கிய கவனம் செலுத்த வேண்டும். அரசியல் குறுக்கீடு: போதிய மாணவர் எண்ணிக்கை இல்லாத பள்ளிகளும் அரசியல் குறுக்கீடு காரணமாக கடந்தாண்டில் தரம் உயர்த்தப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. எனவே, இந்தாண்டு தரம் உயர்த்தும் பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை உள்ளதா என முன்கூட்டியே ஆய்வு செய்ய வேண்டும். உயர்த்தப்பட்ட பின், அதற்கான ஆசிரியர் பணியிடங்களையும் தாமதிக்காமல் நிரப்பினால் தான் எதிர்பார்த்த கல்வி வளர்ச்சி ஏற்படும் என, கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

'காலி'களால் கவலை:

அதேபோல் இத்துறையை எதிர்நோக்கியுள்ள மற்றொரு பிரச்னை, காலியாக உள்ள கல்வி அதிகாரிகள் பணியிடங்கள். மொத்தமுள்ள 120 டி.இ.ஓ.,க்களில், 40 பணியிடங்கள் வரை காலியாக உள்ளன. 64 முதன்மை கல்வி அலுவலர்களில், 13 இடங்கள் காலியாக உள்ளன. இதுதவிர, ஒரு இயக்குனர், 3 இணை இயக்குனர்கள் என முக்கிய கல்வி அதிகாரிகள் பணியிடங்கள் பல மாதங்களாக காலியாக உள்ளன. பெரும்பாலாலும் 'பொறுப்பு' அதிகாரிகளால் அந்த இடங்கள் நிரப்பப்பட்டுள்ளதால், இரண்டு பொறுப்புக்களையும் சரியாக கண்காணிக்க முடியாமல், கல்வி பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுதவிர, கல்வித் துறையில் குவிந்து கிடக்கும் ஐகோர்ட் வழக்குகளை தீர்க்கும் வகையிலும் நாளை நடக்கும் மானியக் கோரிக்கையில் தனிகவனம் செலுத்தி அறிவிப்புகள் வெளியாக வேண்டும், என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment