ஏழு மாதங்களுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றவருக்கு மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,) பதவி உயர்வு அறிவித்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது அத்துறையில் நிலவும் உச்சகட்ட குழப்பத்தை காட்டுகிறது. மாநில அளவில் பதவி உயர்வு பட்டியலில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளித் தலைமையாசிரியர்கள் 49 பேருக்கு 'மாவட்ட கல்வி அலுவலர்' பதவி உயர்வு அளித்து கல்வித் துறை நேற்று உத்தரவிட்டது. இதில், மதுரை மாவட்ட பதவி உயர்வு பட்டியலில் தலைமையாசிரியர்கள் சங்கரநாராயணன் (விரகனூர்) விருதுநகர் தொடக்க கல்வி அலுவலராகவும், நடராஜன் (ஒத்தக்கடை) ஊட்டி கூடலூர் டி.இ.ஓ.,வாகவும், விஜயலட்சுமி (வாடிப்பட்டி) திருச்சி டி.இ.ஓ.,வாகவும், ரவி (முதன்மை கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர்) சிவகங்கை டி.இ.ஓ.,வாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதில் ரவி, 1.3.2014ல் விருப்ப ஓய்வில் சென்றார். ஆனால், அவரது பெயரும் பதவி உயர்வு பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குளறுபடி குறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: கல்வித் துறையில் தொடர்ந்து குழப்பங்கள் அரங்கேறி வருகின்றன. பள்ளிகள் தரம் உயர்த்துவதிலும், பள்ளி பட்டியல் அறிவிப்பதிலும் தாமதம் ஏற்பட்டது. இதனால், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பாதித்தது. இதேபோல், டி.இ.டி., தேர்வுகள் குறித்து பல்வேறு குழப்பங்கள் கல்வித் துறையை சுற்றி வருகின்றன. இன்னும் தெளிவான முடிவு ஏற்படவில்லை. சமீபத்தில் நடந்த ஆசிரியர் கவுன்சிலிங் சமயத்திலும் குழப்பம் அடைந்த பலர் கோர்ட் படியேறியுள்ளனர். இந்நிலையில், பல மாதங்களாக காலியாக கிடந்த மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்பியது வரவேற்கத்தக்கது என்றாலும், விருப்ப ஓய்வு பெற்றவருக்கும் பதவி உயர்வு கிடைத்துள்ளது கேலிக்கூத்தாகும். சம்மந்தப்பட்டவர், 1.3.2014ல் விருப்ப ஓய்வு பெற்றார். ஆக.,11 முதல் 23 வரை பதவி உயர்வு பட்டியலில் உள்ளவர்களுக்கு சென்னையில் டி.இ.ஓ.,விற்கான நிர்வாக பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போதாவது பழைய பேனலில் இருந்த விருப்ப ஓய்வு பெற்ற நபரை கண்டறிந்து நீக்கியிருக்கலாம். இது அதிகாரிகள் அலட்சியத்தை காட்டுகிறது. இதன் மூலம் பதவி உயர்வு பெற வேண்டிய ஒருவரும் பாதித்துள்ளார் என்பதையும் பார்க்க வேண்டும், என்றனர்.
No comments:
Post a Comment