Saturday, 13 September 2014

சிக்கல்! : நிதியின்மையால் கலவை சாதம் செய்ய... : வெளியே சொல்ல முடியாமல் தவிப்பு


கலவை சாதம் திட்டத்துக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யாததால், சத்துணவு, அங்கன்வாடி மைய பணியாளர்கள் திகைப்படைந்துள்ளனர்.
அங்கன்வாடி, சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு, கலவை சாதம் வழங்கும் திட்டம், ஓராண்டுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது. அங்கன்வாடி மையங்களில் படிப்படியாக திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. கலவை சாதம் தயாரிப்பது குறித்து, பணியாளர்களுக்கு ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை முட்டையுடன் தக்காளி சாதம், செவ்வாய் கிழமை காய்கறி கலவை சாதத்துடன், பாசி பருப்பு அல்லது கொண்டை கடலை சுண்டல், புதன் கிழமை புலவு சாதத்துடன் முட்டை, வியாழக்கிழமை எலுமிச்சம்பழ சாதத்துடன் முட்டை வழங்கப்படும். வெள்ளிக்கிழமை பருப்பு சாதத்துடன், உருளை கிழங்கும், சனிக்கிழமை காய்கறி கலவை சாதமும் வழங்க திட்டமிட்டுள்ளனர். ஞாயிறு கிழமை விடுமுறை. பள்ளி செயல்பட்டால், சத்துணவு மையங்கள் சனிக்கிழமை செயல்படும்.
மொத்தம், 2,080 அங்கன்வாடி மையங்களில், கலவை சாதம் திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம், 15ம் தேதி முதல், 34,121 குழந்தைகள் முழுமையாக பயன் பெறுவர். ஏற்கனவே அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் அரசால் வழங்கப்படுகிறது. இதுகுறித்து அங்கன்வாடி, சத்துணவு மைய பணியாளர்கள் கூறியதாவது: காய்கனிகள் கொள்முதல் செய்வது குறித்து, இதுவரை எவ்வித தகவலும், அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. இதனால் தங்கள் கைகாசை போட்டு சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் கலவை சாதம் திட்டத்தை, நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
தேவையான அளவு காய்கனிகளை வாங்க முடிவதில்லை. குறைந்த அளவிலான காய்கனிகள், தக்காளி, எலுமிச்சம் பழத்தை வாங்கி பயன்படுத்துகின்றனர். தாங்கள் செலவழித்த காசு கைக்கு கிடைக்குமா? வரும் நாட்களில், இதற்காக எவ்வாறு செலவிட வேண்டும் என்பது தெரியவில்லை.
கலவை சாத திட்டத்தில், ஒரு குழந்தைக்கு எவ்வளவு தொகை செலவிட வேண்டும். இதற்கான நிதியை பெறுவது குறித்து, ஆணை வந்துள்ளது. ஆனால், நிதி கிடைக்க பெறவில்லை என்று, அங்கன்வாடி பணியாளர்கள் தெரிவித்தனர். சத்துணவு பணியாளர்களுக்கு அறிக்கை ஏதும் வரவில்லை. எனினும், தொடர்ந்து திட்டத்தை செயல்படுத்த, அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். எனவே வேறு வழியின்றி, கை காசை செலவழித்து வருகிறோம், என்றனர். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஸ்டெல்லா கூறுகையில், ""கலவை சாதம் திட்டத்தில், குழந்தைகளுக்கு செலவிடும் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான நிதி கிடைக்கப்பெறும்,'' என்றார்.

No comments:

Post a Comment