Saturday, 13 September 2014

மாணவர் விபரம் சேகரிப்பதில் தலைமை ஆசிரியர்கள் திணறல்


மாணவர்களின் எடை, உயரம், மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் விபரங்களை, ஆன்லைனில் அப்டேட் செய்ய விவரம் சேகரிப்பதில் தலைமை ஆசிரியர்கள் திணறி வருகின்றனர்.

மாணவர்களின் இடை நிற்றலை தவிர்க்கவும், அவர்களது சுய விபரங்களை அறிந்து கொள்ளவும், பள்ளி கல்வித்துறை சார்பில் ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கான நடைமுறைகள் கடந்த 2013 ஏப்ரலில் தொடங்கப்பட்டுள்ளன.

அதன்படி, மாணவர்களின் பெயர், முகவரி, புகைப்படம் உள்ளிட்ட விபரங்கள் சேகரிக்கப்பட்டு, அவை சி.டி.யாக, சம்பந்தப்பட்ட உதவி தொடக்க கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டு, ஒரு நகல், அந்தந்த பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரலில் தொடங்கிய பணி, 2013 டிசம்பரில் நிறைவு பெற்றது.

இந்நிலையில், கல்வி தகவல் மேலாண்மை திட்ட இணையதளத்தில், அப்டேட் செய்யும் வகையில், அடுத்த கட்டமாக, மாணவ,மாணவிகளின் எடை, உயரம் மற்றும் பெற்றோர் தொலைபேசி எண், பெற்றோர் அல்லது மாணவரின் மின்னஞ்சல் முகவரி ஆகிய விபரங்களை வரும் 25ம் தேதிக்குள் சேகரிக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணவர்களின் எடையை பரிசோதிக்க பள்ளிகளில் எடை மிஷின் இல்லை. ஒரு சில மாணவர்கள் அந்த பள்ளியை விட்டு வேறு பள்ளிக்கோ, வேறு ஊருக்கோ மாறுதலாகி சென்று விட்டனர். அவர்களது விபரங்களை சேகரிக்க முடியவில்லை. விபரங்களை சேகரிக்கும் கல்வித்துறை, அதற்குரிய வசதிகளை செய்து தருவதில்லை என தலைமை ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

No comments:

Post a Comment