ஊட்டியில், குறுமைய அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பள்ளிகளுக்கு இடையேயான குறுமைய அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள், ஊட்டி எச்.ஏ.டி.பி., விளையாட்டு மைதானத்தில் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இதில், அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர். இதில், ஓட்டம், நீளம் தாண்டுதல், தட்டெறிதல் உட்பட பல வகை போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மாணவர்களை பொறுத்தவரை 70 சதவீத மாணவர்கள் மட்டுமே, ஒரு விளையாட்டு வீரருக்குரிய ஸ்டைலில் போட்டிகளில் பங்கெடுக்கின்றனர். அவர்கள் முறையான பயிற்சி பெற்று, தங்களது திறமையை பட்டை தீட்டி வருகின்றனர் என்பதை அதன் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. போட்டிகளில் பங்கேற்கும் மாணவியரை பொறுத்தவரை 40 சதவீதம் பேர் மட்டுமே, முறையான பயிற்சி பெற்று, போட்டிகளில் பங்கேற்கின்றனர். மாறாக, பெரும்பாலான மாணவியர் விரைவில் சோர்ந்து போய் விடுகின்றனர்.
காரணம் என்ன?
ஆக்ஸிஜன் அளவு குறைவாக உள்ள நீலகிரி மாவட்டத்தில், தொடர் பயிற்சி பெறுவதன் மூலம், மாணவ, மாணவியரின் திறமைகள் அதிகளவில் வளரும். ஆனால், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு ஆர்வமுள்ள மாணவ, மாணவியருக்கு அதற்கான ஊக்குவிப்புகள் முறையாக இல்லை. இதற்கு காரணம், பாட சுமை.
Home work என்ற பெயரில், மாணவ, மாணவியர் மத்தியில் அதிகளவு பாடச்சுமை சுமத்தப்படுவதால், தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற மனநிலைக்கு மாணவியர்கள் தள்ளப்படுகின்றனர். விளைவு, அவர்களது விளையாட்டு திறமைகள் முடங்கிப் போகின்றன என, விளையாட்டு ஆர்வலர்கள் குறைபட்டு கொள்கின்றனர். வட்ட, மாவட்ட அளவில் வெற்றி பெற்று மண்டல மற்றும் மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வாகும் மாணவ, மாணவியர் பெரியளவில் சாதிப்பதில்லை என்பதே இதற்கு உதாரணம்.
எனவே, விளையாட்டு ஆர்வம் மற்றும் திறமையுள்ள மாணவ, மாணவியரின் திறமைகளை ஊக்குவிக்க பள்ளி நிர்வாகங்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என்பதே விளையாட்டு ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
No comments:
Post a Comment