பிளஸ்–2 தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க 4 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
போலீஸ் பாதுகாப்பு தீவிரம்
பிளஸ்–2 தேர்வுக்காக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தலைமையில் மாவட்ட தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கல்வித்துறை அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவார்கள்.
அந்த குழுவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி, சப்–கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் அவர்தம் எல்லைக்குட்பட்ட இடங்களில் தேர்வு மையங்களை திடீர் என்று பார்வையிட்டு முறைகேடுகள், ஒழுங்கீனங்கள் எதுவும் நடைபெறாத வண்ணம் தீவிரமாக கண்காணிப்பார்கள்.
அண்ணாபல்கலைக்கழகத்தை சேர்ந்த அதிகாரிகள், தேர்வு மையங்களை பார்வையிட சிறப்பு பார்வையாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
பறக்கும்படை
முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் பறக்கும் படைகளை நியமித்துள்ளனர். மொத்தத்தில் தமிழ்நாட்டில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் துண்டு தாள் வைத்திருத்தல், துண்டு தாள்களை பார்த்து எழுத முயற்சித்தல், பிற மாணவர்களை பார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரிகளிடம் முறைகேடாக நடந்து கொள்ளுதல், தேர்வுத்தாள் மாற்றம் செய்தல், ஆள்மாறாட்டம் செய்தல் ஆகிய குற்றங்கள் கடும் குற்றங்களாக கருதப்படும். மாணவ–மாணவிகள் தேர்வு எழுதும்போது ஒழுங்கீனச்செயல்களில் ஈடுபட்டு தங்கள் எதிர்காலத்தை வீணாக்கிக்கொள்ளவேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
விடைத்தாள் மதிப்பீட்டு மையங்கள் அதிகரிப்பு
விடைத்தாள் திருத்த, முன்பு மாவட்டத்திற்கு ஒரு விடைத்தாள் மதிப்பீட்டு மையம் இருந்தது. இந்த வருடம் கல்வி மாவட்டத்திற்கு ஒரு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இந்த வருடம் 66 மையங்களில் விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட உள்ளது.
தேர்வு மற்றும் விடைத்தாள் திருத்தும் பணிக்காக ரூ.30 கோடி செலவிடப்பட உள்ளது.
இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment