பல்லி மிதந்த குடிநீரை குடித்த, அரசு துவக்கப் பள்ளி மாணவர்கள், ஒவ்வாமை ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொன்னையம்பட்டி அரசு துவக்கப் பள்ளியில், 500 லி., கொள்ளளவு கொண்ட, தண்ணீர் தொட்டி உள்ளது. பேரூராட்சி வினியோகிக்கும் நீரை, தொட்டியில் சேமித்து பயன்படுத்துகின்றனர். நேற்று காலை, பள்ளி வந்த மாணவ, மாணவியர், அந்த நீரை குடித்தனர். தொட்டியை எட்டிப் பார்த்த சிலர், சிறிய பல்லி மிதந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து, சக மாணவர்களிடம் தெரிவித்தனர். தண்ணீரைக் குடித்தவர்கள், அழத் துவங்கினர். "108' அவசர கால ஆம்புலன்ஸ் மூலம், குழந்தைகளை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சுகாதாரப் பிரிவு அதிகாரிகள், பள்ளியில் முகாமிட்டு, தொட்டியை சுத்தம் செய்து, பள்ளி வளாகத்தில், கிருமிநாசினி மருந்து தெளித்தனர்.
திண்டுக்கல் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர், பிரபாகரன் கூறியதாவது: பல்லி விழுந்த குடிநீரை குடித்து, வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக, 33 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது, பயத்தால் தான் ஏற்பட்டுள்ளது. பல்லியை பார்த்தவுடன் ஏற்பட்ட ஒவ்வாமையால், வாந்தி எடுத்துள்ளனர். தடுப்பு மருந்துகள் அளிக்கப்பட்டு, அனைத்து குழந்தைகளும் நலமாக உள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment