தமிழகமெங்கும் நகராட்சிப் பள்ளிகளின் கழிப்பறைகளை மேம்படுத்தும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது; இந்த முன்னோடித் திட்டம் முதன்முதலாக பல்லாவரம் நகராட்சியில் தொடங்கப்படும் என்று நகராட்சி நிர்வாக ஆணையர் சந்திரகாந்த் பி.காம்ப்ளே கூறினார்.
சென்னையில் முதல்வரின் தொலைநோக்குத் திட்டம் தொகுப்பில் உள்ள திறந்தவெளியில் மனிதக்கழிவு கழிப்பதை ஒழித்தல் குறித்த விழிப்புணர்வு முகாம் தொடக்கவிழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில் விழிப்புணர்வு கையேட்டை மதுரை மேயர் ராஜன் செல்லப்பா வெளியிட, தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சாவித்ரி கோபால் பெற்றுக் கொண்டார்.
பின்னர் திறந்தவெளியில் மனிதக்கழிவு கழிப்பதை ஒழிக்க வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணர்வு போஸ்டர்கள், குறும்படங்கள் வெளியிடப்பட்டன.
பின்னர் நகராட்சி நிர்வாக ஆணையர் சந்திரகாந்த் பி.காம்ப்ளே பேசியதாவது: பொதுமக்களின் கழிப்பிடத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கென தமிழகமெங்கும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளில் அமைக்கப்பட்ட கழிப்பிடங்கள் உரிய பலனைத் தரவில்லை. அவை பொதுமக்களின் வரவேற்பையும் முழுமையாகப் பெறவில்லை.
இதனால் பெருகி வரும் திறந்தவெளிக் கழிப்பிடப் பழக்கத்தை ஒழிக்கும் வகையிலும், பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த 3 ஆண்டுகளில் தமிழகமெங்கும் உள்ள உள்ளாட்சிகளில் 1,312 கழிப்பிடங்களை மேம்படுத்தவும், புதிதாக 806 கழிப்பிடங்கள் கட்டவும் ரூ. 224 கோடி செலவிடப்பட்டுள்ளது. விரைவில் 490 கழிப்பிடங்கள் கட்டி முடிக்கப்பட உள்ளன.
பொது இடங்களில் மக்கள் பயன்படுத்தும் கழிப்பிடங்களில் உள்ள குறைபாடுகளை ஆய்வு செய்து, அனைவரும் உபயோகிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட நம்ம டாய்லெட் கழிப்பறைத் திட்டம், கடந்த ஆண்டு தாம்பரம் நகராட்சியில் மாதிரித் திட்டமாகத் தொடங்கப்பட்டது. உரிய முறையில் பராமரித்து, வெற்றிகரமாக இன்றும் செயல்படுத்தப்பட்டு வருவதுடன், தமிழகமெங்கும் பல்வேறு இடங்களில் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது.
மக்களின் பயன்பாட்டிற்காகக் கட்டப்படும் கழிப்பிடங்களை மக்கள் தயக்கமின்றி பயன்படுத்தும் வகையில் பராமரிக்கப்படுவது அவசியம் என்றார் அவர்.
No comments:
Post a Comment