பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கும் நேரத்தை காலை ஒன்பதேகால் மணியாக மாற்றியதால் மாணவர்களுடன், ஆசிரியர்களும் பெரும் துயரத்திற்கு ஆளாவதுடன், தேர்ச்சி வீதம் குறையும் என கல்வியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 26ம் தேதி துவங்கி ஏப்.9ல் முடிகிறது. காலை 10 மணிக்கு துவங்கிய பொதுத்தேர்வு, இம்முறை காலை ஒன்பதே கால் மணிக்கே துவங்கும் என அரசு அறிவித்திருக்கிறது. இது தேர்வெழுதும் மாணவர்கள், தேர்வு பணியாற்றும் ஆசிரியர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. பல்வேறு ஆசிரியர் சங்கங்களும், மாணவ அமைப்புகளும் பலதரப்பட்ட போராட்டங்கள் நடத்தியும், இக்கோரிக்கைக்கு அரசு இதுவரை செவிசாய்க்கவில்லை.
தமிழகத்தில் 13 லட்சம் மாணவர்கள் 3 ஆயிரத்து 800க்கும் அதிகமான மையங்களில் இத்தேர்வை எழுதுகின்றனர். இதில் கிராமப்புற மாணவர்களே அதிகம். உரிய போக்குவரத்து வசதியற்ற கிராமங்களின் மாணவர்கள் சரியான நேரத்திற்கு தேர்வு மையம் வரமுடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் சாமி சத்தியமூர்த்தி கூறுகையில், நகருக்குள் போக்குவரத்து நெரிசல் இருக்கிறது. கிராமங்களில் உரிய பஸ் வசதிகள் இருப்பதில்லை. ஒன்பது மணிக்குள் தேர்வறைக்குள் வர வேண்டும். அதிகாலை 5 மணிக்கு கண்விழித்து குளித்து, உடைமாற்றி பஸ் பிடித்தால்தான் அடுத்த ஊர் பள்ளி மையத்திற்கு வந்து சேரலாம். இதில் காலையில் புத்தகத்தை திரும்ப வாசிப்பது இயலாமல் போய்விடும்.
காலை உணவை அதிகாலையில் முடிக்கிற மாணவருக்கு, 11 மணிக்கெல்லாம் அதிக பசியால் மூளைச் சோர்வுக்கு ஆளாவர். படித்ததெல்லாம் மறந்து போகும். காலை ஒன்பதேகால் என மாற்றியதற்கு வெயிலை காரணம் சொல்கின்றனர். 25ம் தேதி வரை பிளஸ்2 தேர்வெழுதுகின்றனர். மார்ச் 26ல் பத்தாம் வகுப்பு மாணவர்களை மட்டும் வெயில் பாதிக்குமா?. எனவே காலை 10 மணிக்கே தேர்வு துவங்கும் அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும் என்றார்.
தமிழக மூத்த கல்வியாளர் ராஜூ கூறுகையில், தமிழகத்தில் கிராமப்புற மாணவர்கள்தான் அதிகம். அவர்களைத்தான் இந்த நேரமாற்றம் அதிகம் பாதிக்கும். ஒரு பஸ்சை தவறவிட்டாலும், தேர்வை தவறவிடும் ஆபத்திருக்கிறது. சிலர் 2 பஸ்கள் பிடிக்க வேண்டியதும் இருக்கும். பதற்றத்தில் படித்தது மறப்பதுடன், காலையில் ஒரு மணிநேரம் பாடங்களை திருப்புவதும் தடைபட்டு, நல்ல மதிப்பெண் பெறுபவர்களையும் இது மதிப்பெண் குறைவிற்கு தள்ளிவிடும் என்றார்.
No comments:
Post a Comment