அரசு பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வி பிரிவுக்கு மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில், ஆசிரியர்கள், விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறைந்தபட்சம் பள்ளி ஒன்றுக்கு 20 மாணவர்களை சேர்க்க தலைமையாசிரியர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் தனியார் பள்ளிகளுடன் போட்டியிட முடியாமல் மாணவர்கள் சேர்க்கை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.
இதன் காரணமாக போட்டிகளை சமாளிக்கும் நோக்கில், கடந்த இரண்டு ஆண்டுகளாக, அரசு பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வி சேர்க்கை நடந்துவருகிறது. பெற்றோர்கள் மத்தியில் பொதுவாக காணப்படும் ஆங்கிலவழிக் கல்வி மோகத்தால் நடப்பு கல்வியாண்டில் சற்று மாணவர்கள் சேர்க்கை அதிகரித்திருந்தாலும், தமிழ் வழிக்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை கடும் சரிவை சந்தித்துள்ளது.
நடப்பு கல்வியாண்டில், ஒரு லட்சம் மாணவர்கள், ஆங்கில வழிக்கல்வியில் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது 3,500 பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி செயல்பட்டு வருகிறது. வரும் கல்வியாண்டில் (2014-2015) கூடுதலாக, 3,800க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி துவங்கவுள்ளது. இதற்கான விழிப்புணர்வு பிரசாரத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஆங்கிலவழிக் கல்வியில் குறைந்தபட்சம் பள்ளி ஒன்றுக்கு, 20 மாணவர்களை சேர்க்க தலைமையாசிரியர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுடன் போட்டியிடும் நோக்கில் துவங்கப்பட்டுள்ள ஆங்கில வழிக் கல்வியால், தமிழ் வழிக்கல்வி, பெயரளவில் செயல்படும் சூழல் எழுந்துள்ளது. இந்நிலை தொடரும் பட்சத்தில், குறைந்தபட்சம் மூன்றாண்டுகளில் அரசு பள்ளிகளில், தமிழ் வழிக்கல்வி காணாமல் போகும் அபாயம் ஏற்படும் என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் ஒருவர் கூறுகையில், &'&'கடந்த 2008-09ம் ஆண்டு தொடக்கப்பள்ளிகளில் 43.67 சதவீதமாக இருந்த மாணவர்கள் சேர்க்கை, படிப்படியாக குறைந்து 2011-12ல் 37.75 சதவீதமாகவும், 2012-13ல் 36.58 சதவீதமாகவும் குறைந்துள்ளது. &'&'கடந்த கல்வியாண்டிலும் இதே நிலைதான் ஏற்பட்டுள்ளது. விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள நாங்கள், ஆங்கிலவழிக்கல்விக்கு மட்டும் மாணவர்களை சேர்க்கிறோம். இதனால் தமிழ்வழியில் மாணவர்கள் சேர்க்கைக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது&'&' என்றார்.
No comments:
Post a Comment