எவ்வளவுதான் சம்பளம் உயர்ந்தாலும், அதைவிட பல மடங்கு விலைவாசி உயர்ந்துவிடுவது நடுத்தர மக்களின் சாபக்கேடு. இது ஒரு புறம் இருக்க, இன்னமும் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பை ரூ.2 லட்சத்திலேயே வைத்திருப்பது எந்த விதத்திலும் சரியாகாது. மாதம் ரூ.20,000 சம்பளம் வாங்கினாலே, ஆண்டுச்சம்பளம் ரூ.2 லட்சத்தை தாண்டி விடுகிறது. மாத சம்பளதாரர்கள் விரும்புகிறார்களோ இல்லையோ, அவர்களின் சம்பளத்தில் இருந்து, வரி தொகை பிடித்தம் செய்யப்பட்டுவிடும். அதன் பின்னர்தான் உரிய கணக்குகளை காட்டி, அதை திரும்ப பெறவேண்டும். கையில் பணம் இருப்பவர்கள், வரிச்சலுகைக்கான இனங்களில் முதலீடு செய்தும், வீடு வாங்கியும் சமாளிக்கிறார்கள். ஆனால், இவர்களை ஒட்டுமொத்தமாகவே கணக்கு எடுத்தாலும், மிக குறைவாகத்தான் இருப்பார்கள்.
வரி கட்டுபவர்கள், இவர்களை விட பல மடங்கு அதிகம். காங்கிரஸ் அரசின் மீது மக்களுக்கு கோபம் வருவதற்கு முக்கிய காரணமாக இருந்த ஒரு விஷயத்தில் வருமான வரி உச்சவரம்பும் ஒன்று. 2010ம் ஆண்டிலேயே நாடாளுமன்ற நிலைக்குழு, வருமான வரி விலக்கு உச்சவரம்பை யி3 லட்சமாக ஆக்கலாம் என்று பரிந்துரை செய்தது. எனினும், கோடீஸ்வரர்களுக்கு அளித்த வரிச் சலுகைப்போல், நடுத்தட்டு மக்களுக்கு அளிக்க மறந்ததும், மறுத்ததும் காங்கிரசுக்கு மட்டுமின்றி, கட்சிக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. மக்களவை தேர்தல் சமயத்தில் வருமான வரி விலக்கு உச்சவரம்பை உயர்த்துவதற்கு பாஜவும் ஆதரவு தெரிவித்தது.
வருமான வரி முறையில் நடுத்தட்டு மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், புதிய முறையிலான வரித் திட்டத்தை கொண்டு வரலாம் என்று நரேந்திர மோடியும் ஆலோசனை தெரிவித்திருந்தார். இப்போது அவர் தலைமையிலான பாஜ அரசு, விரைவில் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. இதில், வருமான வரி விலக்கு உச்சவரம்பை தற்போதுள்ள ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்த முடிவு செய்திருப்பதாக நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வரி சீர்திருத்த முறை ஒரு பக்கம் மக்களின் விருப்பமாக இருந்தாலும், உடனடி மகிழ்ச்சியை அளிக்கக்கூடியதாக அமைந்துள்ள இந்த செய்தி, உண்மையிலேயே நடுத்தட்டு மக்களின் கஷ்டத்தை சற்று தணிக்கும்.
No comments:
Post a Comment