மாவட்ட கலெக்டர்களுக்கு சென்னையில் 3 மற்றும் 4-ந்தேதிகளில் (நாளை மற்றும் நாளை மறுநாள்) தேர்தல் பயிற்சி நடத்தப்படுகிறது.
தேர்தல் கமிஷன் அறிவுரை
நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளை இந்திய தேர்தல் கமிஷன் தொடக்கியுள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகள் குறித்து மாநில தலைமைத்தேர்தல் அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களை இந்திய தேர்தல் கமிஷன் வழங்கி வருகிறது. அதன் ஒரு அம்சமாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றும் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தலைமையில் இந்த பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா மேலாண்மை கல்வி நிறுவனத்தில் 3 மற்றும் 4-ந்தேதிகளில் பயிற்சி முகாமை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
போலீஸ் அதிகாரிகளுக்கும்
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்ட கலெக்டர்களுக்கு 3-ந்தேதியிலும், மீதமுள்ள மாவட்ட கலெக்டர்களுக்கு 4-ந்தேதியிலும் பயிற்சி அளிக்கப்படும். தேர்தலை நடத்துவது, அதற்கான முன்னேற்பாடுகளை செய்வது ஆகியவை குறித்து தேர்தல் அதிகாரிகள் பயிற்சி அளிப்பார்கள்.
இந்த மாதத்தின் இறுதியில் மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு தேர்தல் பயிற்சி அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment