தகவல் உரிமைச் சட்டத்தின்படி (ஆர்டிஇ) தனியார் பள்ளிகளில் சேரும் நலிவடைந்த, ஏழை மாணவர்களின் கல்விக்கான செலவினத்தை மாநிலங்களுடன் மத்திய அரசு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு யோசனை தெரிவித்துள்ளது.
தில்லியில் கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன் பேசியது:
2009-ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட கல்வி உரிமைச் சட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னோடியாகத் திகழ்கிறது. 2011-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தவுடனேயே அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச, கட்டாய கல்வி அளிக்கும் விதிகளை தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டது. அதன்படி, நலிவடைந்த, ஆதரவற்ற நிலையில் உள்ள, கல்விக் கட்டண வசதி இல்லாத மாணவர்களுக்கு பள்ளிகளில் சேர 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. குழந்தைகள் உரிமை பாதுகாப்பான மாநில ஆணையத்தையும் தமிழக அரசு அமைத்தது.
மாணவர்களுக்குத் தரமான கல்வியை வழங்க தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நியமிக்கும் வகையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் மூன்று முறை நடத்தப்பட்டுள்ளன. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில்தான் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ. 16,965 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இலவச, கட்டாயக் கல்வி மட்டுமன்றி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி (லேப்டாப்), பாட நூல்கள், கலர் பென்சில்கள் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்படுகின்றன.
அனைத்துப் பள்ளிகளிலும் கழிவறைகள், முப்பருவத் தேர்வு முறையுடன் கூடிய எளிமையான கல்வி கற்கும் வாய்ப்புகள், பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளை வழங்கும் வசதி சோதனை அடிப்படையில் அரியலூர்,பெரம்பலூர் ஆகிய இடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது போன்றவை, மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் நடவடிக்கையில் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.
தற்போதைய கல்வி உரிமைச் சட்டத்தின்படி நலிவடைந்த, ஆதரவற்ற மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இப் பிரிவின்படி மொத்தம் 49,864 மாணவர்கள் பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர்.
இச்சட்டத்தின் பன்னிரண்டாவது பிரிவில், "இடஒதுக்கீட்டின் கீழ் கல்வி பெறும் மாணவருக்கான செலவினம் அல்லது மாணவருக்கான மொத்தச் செலவினம், இதில் எது குறைவோ அந்த நிதியை மாணவர் பயிலும் பள்ளிக்கு மாநில அரசு ஈடு செய்ய வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், அந்த நிதி எந்த வடிவில் ஈடு செய்யப்பட வேண்டும் என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்தவில்லை.
அனைவருக்கும் கல்வி அளிக்கும் திட்டம் மூலம் நிதி வழங்கலாம் என்றால், 2013-14 நிதியாண்டில் அதற்கான ஒதுக்கீட்டை மத்திய அரசு செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதென்றால் 65 சதவீதத்தை மத்திய அரசும் 35 சதவீதத்தை மாநில அரசும் பகிர்ந்து கொள்ளலாம். அல்லது 13-வது நிதி ஆணையத்தின் மானிய உதவித் தொகையில் இருந்து கல்விக்கான செலவினத்துக்கு நிதியை ஒதுக்கலாம். இந்த வாய்ப்புகளை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று பழனியப்பன் கேட்டுக் கொண்டார்.
இந்த மாநாட்டில் தமிழக பள்ளிக் கல்வித் துறைச் செயலர் டி. சபிதா, உயர் கல்வித் துறை முதன்மைச் செயலர் அபூர்வ வர்மா ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment