
ஒவ்வொருவரும் தங்களிடம் உள்ள புத்தகங்களை படித்து விட்டு நூலகத்துக்கு தர வேண்டும் என்று கலெக்டர் ஜெயஸ்ரீ கேட்டுக்கொண்டுள்ளார். திருச்சி மாவட்ட மைய நூலகத்திற்கு போட்டி தேர்வுக்கான புதிய நூல்கள் நன்கொடையாக வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட மைய நூலகத்தில் நேற்று நடந்தது. இதில் கலெக்டர் ஜெயஸ்ரீ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய நூல்களை நன்கொடையாக பெற்றுக்கொண்டு பேசியதாவது:
மாவட்ட நலப்பணி நிதிக்குழு மூலம் ரூ.72 ஆயிரம் மதிப்புள்ள புதிய நூல்கள் ஏற்கனவே நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்திலிருந்து அதிகளவிலான மக்கள் குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சி பெற்று உயர் பதவிகளுக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கில் இன்று(நேற்று) திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் ரூ.67ஆயிரம் மதிப்பிலான நூல்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் தங்களிடம் உள்ள புத்தகங்களை படித்து விட்டு நூலகங்களுக்கு நன்கொடையாக வழங்க வேண்டும். இதைபோல் பொது மக்கள், வங்கிகள், நூலக ஆர்வலர்கள் வாசகர்களின் தேவைக்கேற்ப போட்டி தேர்வு நூல்கள், குழந்தைகள் நூல்கள் போன்ற புதிய நூல்களை நன்கொடையாக நூலகங்களுக்கு வழங்க இந்நிகழ்வு தொடக்கமாகவும், முன்னுதாரனமாக இருக்க வேண்டும் என்றார்.
இதில் மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளர் மிருணாளினி, மாவட்ட நூலக அலுவலர் சிவகுமார், மைய நூலகர் செல்வராசு, வாசகர் வட்ட தலைவர் கோவிந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
1.52 லட்சம் நூல்கள்
மாவட்ட மைய நூலகத்தில் தற்போது 1,52,665 நூல்கள் மற்றும் 33,360 உறுப்பினர்கள் உள்ளனர். ஒரு நாளைக்கு சராசரியாக 750 வாசகர்கள் வந்து செல்கின்றனர். ஒரு நாளைக்கு சராசரியாக 350 நூல்கள் இரவலாக எடுத்துச் செல்கின்றனர்.
No comments:
Post a Comment