தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா நேற்று வெளியிட்ட அறிவிப்பு: ஒருங்கிணைந்த சார்நிலைப்பணிகளுக்கான தேர்வு 1 (குருப் 2 பதவி), 2011-2013ல் அடங்கிய பதவிகளுக்கு, நேரடி நியமனம் செய்யும் பொருட்டு டிஎன்பிஎஸ்சி கடந்த 4.11.2012 அன்று எழுத்து தேர்வை நடத்தியது. இதில், நேர்காணல் அல்லாத எஞ்சியுள்ள பதவிகளுக்கு விண்ணப்பதாரரை தேர்வு செய்யும் பொருட்டு 3வது கட்ட கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர் பதிவெண்கள் அடங்கிய தற்காலிகப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கலந்தாய்வு வருகிற 28ம் தேதி காலை 8.30 மணி முதல் பிராட்வேயில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வுக்கான தேதி, நேரம் குறித்து விண்ணப்பதாரருக்கு அழைப்பாணை விரைவஞ்சல் மூலம் தனியாக அனுப்பப்பட்டுள்ளது. மேலும் கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதத்தை தேர்வாணைய இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எஞ்சியுள்ள நேர்காணல் அல்லாத காலிப்பணியிடங்களை நிரப்ப 197 விண்ணப்பதாரர்கள் 3வது கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ள தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, கலந்தாய்வில் பங்கேற்க அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர் பெற்றுள்ள மதிப்பெண், தரவரிசை, இடஒதுக்கீட்டு பிரிவு, விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல், தகுதியுடைமை மற்றும் நிலவும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படுவர். விண்ணப்பதாரர் அளித்துள்ள தகவல், தவறாக இருக்கும் பட்சத்தில் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள். நேர்காணல் அல்லாத பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் மற்றும் நிரப்பப்படாத பணியிடங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றையும் நிரப்புவதற்கான கலந்தாய்வு பின்னர் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment