Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday, 18 April 2014

பயிற்சி முகாமில் வசதிகள் இல்லாததால் ஓட்டுச்சாவடியில் பணியாற்றும் அலுவலர்கள் வெளிநடப்பு


பயிற்சி மையத்தில் எதுவுமில்லை,' என கூறி பொள்ளாச்சியில், ஓட்டுச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்கள் வெளிநடப்பு செய்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. 

பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், ஓட்டுச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், பொள்ளாச்சி லோக்சபா தொகுதி, உடுமலை சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஓட்டுச்சாவடி மையங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் பொள்ளாச்சி கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, நேற்று வழக்கம் போல, ஓட்டுச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்கள் காலை 9:00 மணிக்கே வந்து காத்திருந்தனர். ஆனால், போதுமான வசதிகள் எதுவும் மேம்படுத்தப்படவில்லை என புகார் கூறி வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஓட்டுச்சாவடி மையங்களில் பணியாற்றும் அலுவலர்கள் கூறியதாவது:
உடுமலை சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஓட்டுச்சாவடி மையங்களில், பணியாற்றும் ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்கள், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு மூன்று கட்ட பயிற்சி முகாம் நடந்தது. இரண்டு நாட்களுக்கு முன் நடந்த பயிற்சி சரியாக நடத்தப்படவில்லை என கூறி மீண்டும் பயிற்சி முகாம் பொள்ளாச்சி கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் என்றும்; தவறாமல் பங்கேற்க வேண்டும் என நேற்று(நேற்றுமுன்தினம்) எஸ்.எம்.எஸ்., மூலமாக தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, அவினாசி, திருப்பூர், கோவை, அன்னுார் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் ஓட்டுச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்கள் காலை 9:00 மணிக்கே வந்து விட்டோம். ஆனால், பள்ளி வளாகம் திறக்கப்படாமல் இருந்தது. பள்ளியை திறந்து உள்ளே சென்றால், குடிநீர் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதியும் மேம்படுத்தப்படவில்லை. 

அதிகாரிகளாவது வந்துள்ளார்களா என பார்த்தால், ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தும் யாரும் வரவில்லை. 
தாமதமாக வந்த அதிகாரிகள், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரமும் ஐந்து மட்டுமே கொண்டு வந்துள்ளனர். ஆயிரத்து 500 பேருக்கு ஐந்து இயந்திரங்களை வைத்து எப்படி பயிற்சி அளிக்க முடியும். எதையும் முறையாக செய்யாமல், பயிற்சி அளிப்பதாக எங்களை அலைக்கழிப்பது நியாயம் இல்லை. இதனால், வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர். 

அப்போது, அங்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகளிடம், ஓட்டுச்சாவடி அலுவலர்கள்,'காலை 10:30 மணி வரை அதிகாரிகள் வரவில்லை; மூன்று கட்ட பயிற்சி முடிந்து, நான்காம் கட்ட பயிற்சி நடக்கும் போது, எந்த ஓட்டுச்சாவடி மையங்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது என்ற உத்தரவு வழங்கப்படும். ஆனால், நீங்கள் விதிமுறை மீறி, ஐந்து பயிற்சி முகாம்கள் நடத்துவது முறையல்ல; பல்வேறு பகுதியிலிருந்தும் வந்த எங்களை அலைகழிப்பது சரியல்ல,' என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தையினை ஏற்காத அலுவலர்கள் மதியம் 12:00 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தொடர்ந்து, பேசிய அதிகாரிகள்,' போதுமான வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்; போராட்டத்தை கைவிடுங்கள்,' என உறுதியளித்தனர்.

இதனையடுத்து, அலுவலர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மூன்று மணிநேர போராட்டத்தினால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment