மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட சீர்காழி பகுதியில் வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு அரசியல் கட்சி நிர்வாகிகள் உணவு வாங்கித் தருவதாகவும், இதற்கு தேர்தல் பணி கண்காணிப்பு அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு புதன்கிழமை இரவு முதல் நீடித்து வந்தது.
இது தொடர்பாக சீர்காழியைச் சேர்ந்த சிலர், தமிழ்நாடு தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டு அறைக்கும், நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் அளித்துள்ளனர். இருப்பினும், இது குறித்து மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பூம்புகார், வானகிரி மீனவர் காலனி, அரசினர் உயர்நிலைப்பள்ளி வாக்குச் சாவடிப் பணி அலுவலர்களுக்கு அப்பகுதியைச் சேர்ந்த திமுகவினர் சிலர் உணவு வழங்கியுள்ளனர். இதற்கு அதிமுக தரப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இது தொடர்பாக, திமுக மற்றும் அதிமுகவினரிடையே அங்கு மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
வாக்குச் சாவடி அருகே கூட்டம் மற்றும் சச்சரவு கூடாது என காவல் துறையினர் அறிவுறுத்திய நிலையிலும், திமுக மற்றும் அதிமுகவினர் அப்பகுதியிலிருந்து விலகாததால், மத்தியப் பாதுகாப்புப் படையினர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.
No comments:
Post a Comment