Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday, 25 April 2014

தனியார் பள்ளிக்கூடங்களில் ஏழை மாணவர்கள்


இந்தியா முழுவதிலும் கல்வி வளர்ச்சிக்கு புதிய உத்வேகம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை ஆண்ட அனைத்துக் கட்சிகளும், இப்போது ஆளும் கட்சியும் அனைவருக்கும் இலவசக்கல்வி அளிக்க வேண்டும் என்பதில் மிகத்தீவிரமாக இருந்து வந்திருக்கிறார்கள். சத்துணவு மட்டுமல்லாமல், அனைத்து அரசு பள்ளிக்கூடங்களிலும், அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களிலும் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள், சீருடை, சைக்கிள், லேப்–டாப் என அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து, மாணவர்களை ஊக்குவிக்கிறார்கள். ஆனால், அரசு பள்ளிக்கூடங்களிலும், அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களிலும், அரசு எவ்வளவோ உதவிகளைச் செய்தாலும், தனியார் பள்ளிக்கூடங்களில் உள்ள கல்வித்தரம் இல்லையே? என்ற கவலை மக்களை வாட்டுகிறது. சில இடங்களில் அரசு பள்ளிக்கூடங்கள் தூரத்திலும், தனியார் பள்ளிக்கூடங்கள் சமீபத்திலும் இருந்தாலும், தனியார் பள்ளிக்கூடங்களை நினைத்துக்கூட பார்க்கமுடியாது என்ற நிலை ஏழை மாணவர்களுக்கு இருக்கிறது.

இந்த கவலையைப் போக்கும் வகையில், மத்திய அரசாங்கம் 2009–ம் ஆண்டில் நிறைவேற்றிய கட்டாய கல்வி சட்டம் நல்ல பல சலுகைகளை ஏழை மாணவர்களுக்கு வழங்கியுள்ளது. இந்த சட்டத்தின்படி 6 முதல் 14 வயது வரை உள்ள அனைத்து மணவர்களும் தங்களுக்கு அருகாமையில் உள்ள பள்ளிக்கூடங்களில் தொடக்கக்கல்வி முடியும் மட்டும் இலவச மற்றும் கட்டாய கல்வி பெறுவது அவர்களின் உரிமை என்று வகுக்கப்பட்டுள்ளது. மாணவர்களிடம் இருந்து கல்விக்கட்டணம் வசூலிக்கும் அனைத்து தனியார் பள்ளிக்கூடங்களிலும் 25 சதவீத இடங்களை இந்த சட்டப்படி ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கப்படவேண்டும். அவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே அந்தப் பள்ளிக்கூடங்களுக்கு திருப்பித்தந்துவிடும் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஒரு கிலோமீட்டர் தூரத்துக்குள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்கள் இருக்கக்கூடாது, பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருக்கவேண்டும் என்பதுபோல, பல நிபந்தனைகள் கூறப்பட்டுள்ளன.

கல்விக்கட்டணம் என்பதில் சீருடைக்கான கட்டணம் மற்றும் புத்தகங்களுக்கான கட்டணம் ஆகியவற்றையும் அரசே கொடுத்துவிடும் என்றாலும், இந்த சட்டப்படி மாணவர்கள் தனியார் பள்ளிக்கூடங்களில் படிப்பதில் நடைமுறைச்சிக்கல்களும் இருக்கின்றன. அந்த பள்ளிக்கூடங்களில் படிக்கும் மற்ற மாணவர்கள் வளரும் விதம், அவர்களுடைய சூழ்நிலை போன்ற பல விஷயங்கள் இந்த மாணவர்களை, அந்தப்பள்ளிக்கூடங்களில் தனிமைப்படுத்தி விடுகிறது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால், இதெல்லாம் காலப்போக்கில் மாறிவிடும். இதை அனைத்தையும் மீறி, இந்த சட்டத்தின் மூலம் எத்தனை ஏழைப்பிள்ளைகள் தனியார் பள்ளிக்கூடங்களில் சேர்ந்துள்ளனர் என்ற கணக்கு இன்னும் திட்டவட்டமாக வெளியிடப்படவில்லை. அனைத்து பள்ளிக்கூடங்களிலும் 25 சதவீத இடங்களில் ஏழை மணவர்களுக்கு சேர்க்கப்படவில்லை. அப்படி சேரும் மாணவர்களும் படிப்பில் மற்ற மாணவர்களோடு போட்டிபோட்டு படிக்கும் சூழ்நிலை இன்னமும் உருவாகவில்லை.

இந்த ஆண்டுக்காக இந்த சட்டத்தின் அடிப்படையில் ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிக்கூடங்களில் சேர்வதற்கு விண்ணப்பங்கள் தாக்கல் செய்வதற்கு மே மாதம் 18–ந்தேதி கடைசி நாள் என்ற வகையில், மாணவர்களின் பெற்றோர் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் புதிதாக ஒரு தர்ம சங்கடம் உருவாகிக்கொண்டிருக்கிறது. தனியார் பள்ளிக்கூடங்கள் அரசின் நிதி உதவியைப் பெற்று நடப்பதில்லை. தங்களின் நிர்வாகச் செலவுக்கும், ஆசிரியர்களுக்கும் கொடுப்பதற்கான சம்பளத்துக்கும் மாணவர்களிடம் கட்டணம் வாங்கித்தான் சமாளிக்கவேண்டும்.

இந்த சூழ்நிலையில், ஏழை மாணவர்களை 25 சதவீத ஒதுக்கீட்டின்படி சேர்த்து கல்வி வழங்கும் பள்ளிக்கூடங்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக அரசிடம் இருந்து பணம் வரவில்லை என்று தனியார் பள்ளிக்கூடங்கள் குறைபட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த தொகை வரவில்லையென்றால் எப்படி அவர்கள் சமாளிக்கமுடியும்?. இதனால் பல பள்ளிக்கூடங்களில் இந்த ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் நீங்கள் கட்டணத்தை செலுத்துங்கள், அரசிடம் இருந்து பணம் வந்ததும் திருப்பித்தந்து விடுகிறோம் என்று சொல்வதால், இந்த ஏழை மாணவர்கள் திக்கு முக்காடிப்போய்விடுகிறார்கள். இந்த சட்டத்தின் நோக்கமே நிறைவேறாமல் போய்விடும் நிலை தோன்றிவிட்டது. தேர்தல் நடந்து முடிந்தவுடன், அடுத்து வரும் மத்திய அரசாங்கம், மாணவர்களைச் சேர்த்து ஒரு குறிப்பிட்ட காலவரைக்குள் தனியார் பள்ளிக்கூடங்களுக்கு கட்டணத்தை திருப்பிக்கொடுத்தால்தான், ஏழை மாணவர்களுக்கு இடம் கொடுப்பதற்கும், அவர்களுக்கு வேறுபாடு இல்லாமல் கல்வி வழங்குவதற்கும் உரிய சூழ்நிலையை தனியார் பள்ளிக்கூடங்களில் உருவாக்க முடியும்.

No comments:

Post a Comment