விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்தல் பயிற்சி வகுப்புக்கு வர வேண்டும் என்று எஸ்எம்எஸ் தகவலை காண்பித்தால், அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: 12 மற்றும் 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி மற்றும் தேர்தல் பணி யில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களுக் கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. பயிற்சி வகுப்புக்கு ஆசிரியர் வர வேண்டும் என்று கடிதம் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.
ஆசிரியர்கள் எஸ்எம்எஸ் தகவல் வந்ததாக கூறினாலும் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களை அப்பணியில் இருந்து உடனே விடுவிக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 60,816 வாக்குப்பதிவு மையங்களில் சுமார் 20 ஆயிரம் வாக்குப்பதிவு மையங்களில் லேப்டாப் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும். இந்த பணியில் ஈடுபட சுமார் 21 ஆயிரம் கல்லூரி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 4 அரசு ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். மத்திய சென்னை தொகுதியில், நாம் யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை தெரிந்து கொள்வதற்கான புதிய மிஷின் வைக்கப்படுவதாலும், ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் வாக்குப்பதிவு மையங்களிலும் 5 அரசு ஊழியர்கள் பணியில் இருப்பார்கள்.
தற்போது புதிய முறையாக, ஒவ்வொரு வாக்குச்சாவடி அருகிலும் அரசியல் கட்சிகள் தொடர்பு இல்லாத இரண்டு பேரின் செல்போன் நம்பர் வாங்கப்பட்டுள்ளது. அவர்களிடம் வாக்குப்பதிவின்போது அவ்வப்போது தொடர்பு கொண்டு தகவல் தெரிந்து கொள்ளப்படும். அதேபோன்று ஏதாவது பிரச்னை நடந்தால் அவர்களும் தலைமை தேர்தல் அலுவலகத்துக்கு உடனே தகவல் கொடுப்பார்கள். இவ்வாறு பிரவீன்குமார் கூறினார்.
மாலை 6 மணிக்கு மேல் வாக்களிக்க முடியுமா?
கண் பார்வை தெரியாதவர்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை ஓட்டுப்போடுவதற்கான வரிசையில் நின்றவர்கள் அனைவரும் வாக்களிக்க முடியும். மாலை 6 மணிக்கு வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, இரவு 10 மணியானாலும் அவர்கள் ஓட்டுப்போட அனுமதிக்கப்படுவார்கள். தமிழகத்தில் 17 வாக்குப்பதிவு மையங்களில் 100 வாக்காளர்களுக்கும் குறைவான எண்ணிக்கையில் வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் குறைந்தபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் கோதையார் மேல்தாங்கல் என்ற வாக்குப்பதிவு மையத்தில் 18 வாக்காளர்களே உள்ளனர்.
அங்கு காலை 10 மணிக்கெல்லாம் 18 பேரும் வாக்களித்தாலும் 6 மணி வரை தேர்தல் ஊழியர்கள் காத்திருந்து, அதன்பிறகுதான் ஓட்டு பெட்டிக்கு சீல் வைக்க வேண்டும். சென்னை, திநகர் சிஐடி நகர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி மையத்தில் 79 வாக்காளர்கள் உள்ளனர். அதேபோன்று மலை பகுதி உள்ளிட்ட மிக தூரமாக உள்ள 21 மையங்களுக்கு ஒரு நாள் முன்னதாகவே வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்படும் என்று பிரவீன்குமார் கூறினார்.
No comments:
Post a Comment